தமிழ்நாடு

“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்

webteam

5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 5 மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு முடிவுகளைக் கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் எனவும் அரசு கேட்டு கொண்டிருந்தது. அத்துடன் பொதுத்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை கல்வித்துறை இயக்குநர்கள் மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் மாணவர்கள் மற்றும் பெற்றோரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் செங்கோட்டையன் “11,12ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்களில் 5 ஆக குறைக்க முதலமைச்சருக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு விரைவில் சீருடைகள், காலணிகள் வழங்கப்படும். 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது மத்திய அரசின் திட்டமாகும். 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும். பொதுத்தேர்வு திட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசிடம் 3 ஆண்டுகளுக்கு விலக்கு கேட்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.