முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று நடந்த கோவை செய்தியாளர் சந்திப்பில், “தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி தன்னையும் ஏமாற்றி பிறரையும் ஏமாற்றக்கூடாது என்பதுதான் என் தத்துவம்" என எடப்பாடி பழனிச்சாமியை குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்.
அதிமுக-வில் நிலவி வரும் வரும் உட்கட்சிப் பூசல் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்திருந்த செங்க்கோட்டையன், “ மனவேதனை அடைகிறேன்.. வருத்தப்படுகிறேன். கண்ணீர் சிந்துகிறேன்.. விதியின் அடிப்படையில் அல்லாமல் சர்வாதிகாரப் போக்கால் உறுப்பினர் பொறுப்பு நீக்கப்பட்டிருக்கிறது” என தெரிவித்திருந்தார். இவ்வாறு, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் முன்னாள அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “தி.மு.க-வில் மட்டும் குடும்ப அரசியல் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி அரசியலிலும் அதுபோன்ற நிலை உள்ளது. இவர்களின் மகன் , மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்கள் தலையெடுத்து வருவது நாடறிந்த உண்மை” என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அரசியல் என்பது கருத்து வேறுபாடுகள் பரிமாறப்படும் தளமாகும். ஆனால், எப்போதும் அதிமுக வின் வெற்றிக்காகவே நான் பணியாற்றி வருகிறேன் என்றும் புரட்சித் தலைவர் காலத்திலிருந்து புரட்சித் தலைவி காலம் வரை, தொடர்ந்து, இன்றைய காலம் வரை, அதிமுக் இயக்கம் நாளை வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் என் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். மேலும், “தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி தன்னையும் ஏமாற்றி பிறரையும் ஏமாற்றக்கூடாது என்பதுதான் என் தத்துவம்" என எடப்பாடி பழனிச்சாமியை குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.