டாஸ்மாக் கடைகள் பேருந்து நிலையங்கள், ஆலயங்கள் அருகே இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் 717 கடைகள் அகற்றப்பட்டதாக செங்கோட்டையன் கூறினார். இத்தகைய சாதனைகள் குறுகிய காலத்தில் செய்திருப்பது முதல்வர் விஜயை தவிர வேறு யாராலும் சாத்தியமில்லை என்றார். அதிமுக குறித்து பேசும்போது, எடப்பாடி பழனிசாமியின் தனிநிலைப் போக்கு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் இயக்கத்தை பலவீனப்படுத்தியதாகவும் விமர்சித்தார்.
கோவை விமான நிலையத்தில் நிதித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “ஆட்சிக்கு வந்து சில நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் இத்தனை கேள்விகள் கேட்கிறீர்கள். இப்போதுதான் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அமைச்சரவை விரிவாக்கம் படிப்படியாக நடைபெறும், எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதனை சமாளிக்கும் திறமை முதல்வருக்கு உள்ளது. நான் இப்போதுதான் சென்னை செல்கிறேன், அதற்குள் எல்லா விஷயங்களுக்கும் எப்படி பதில் சொல்ல முடியும்?” என்று தெரிவித்தார்.
மேலும், “உங்கள் வீட்டு பொருளாதாரத்தை உடனே கேட்டால் சொல்ல முடியுமா? அதுபோலத்தான் அரசின் செயல்பாடுகளும் ஒவ்வொன்றாக முன்னேறும். முதல்வர் விஜய் அறிவித்த 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை மக்கள் வரவேற்றுள்ளனர். மகளிர் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு போன்ற விஷயங்களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
டாஸ்மாக் கடைகள் குறித்து பேசிய அவர், “பேருந்து நிலையங்கள், ஆலயங்கள் அருகே டாஸ்மாக் கடைகள் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் 717 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. பொறுப்பேற்ற உடனேயே இவ்வளவு சாதனைகள் செய்திருப்பது முதலமைச்சர் விஜயை தவிர வேறு யாரும் இல்லை” என்று கூறினார்.
அதிமுக குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடுகளை பார்க்கும்போது ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கம் வலுவிழந்துள்ளதாகத்தான் தெரிகிறது. ‘நான் ஒருவரே போதும்’ என்ற எண்ணத்தில் அவர் செயல்படுகிறார். அதை காலத்தின் கட்டாயம் மாற்றிக் காட்டும்” என்றார்.
மேலும், “அதிமுகவுக்கு எவ்வளவு அமைச்சர்கள் என்பதைக் குறித்து நீங்கள் தான் சொல்ல வேண்டும்; நாங்கள் இதுவரை எதுவும் கூறவில்லை” என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.