சசிகலா முதலமைச்சராவதை யாராலும் தடுக்க முடியாது என அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் கூறினார்.
சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து பி.எச்.பாண்டியன் மற்றும் மனோஜ்பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தனர். அப்போது பேசிய செங்கோட்டையன், பி.எச்.பாண்டியன் அதிமுக வளர்ச்சிக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை. 96ல் அம்மா மீது வழக்கு தொடர காரணமாக இருந்தார் என்று குற்றம்சாட்டினார். பி.எச்.பாண்டியன் உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஜெயலலிதா பதவி வழங்கியதாகவும், அவர் நன்றி மறந்து துரோகிகளுடன் சேர்ந்து பணியாற்றுவதாகவும் செங்கோட்டையன் கூறினார்.
அதிமுக ஒற்றுமையோடு இயங்குவதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார். சசிகலா தனக்கு தாயாக இருந்து தன்னைப் பேணிக் காத்தவர் என வாஜ்பாயிடம் ஜெயலலிதா கூறியதாகத் தெரிவித்த செங்கோட்டையன், சசிகலா முதலமைச்சராவதை யாராலும் தடுக்க முடியாது என்றார். மேலும், சசிகலாவின் திறமையை நேரில் பார்த்தவர்கள் நாங்கள் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் எனக் கூறினார்.