தவெக தலைவர் விஜய், செங்கோட்டையன் pt web
தமிழ்நாடு

LIVE: தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்

கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு 8 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த செங்கோட்டையன் தற்போது விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்திருக்கிறார்.

PT WEB

தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்

தவெக தலைவர் விஜய், செங்கோட்டையன்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில், இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருக்கிறார். இந்நிலையில், அவருக்கு தவெக நிர்வாக குழுவை வழி நடத்தும் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜயின் வீட்டிற்கு, செங்கோட்டையன் சென்றார். சுமார் 2 மணி நேரம் விஜயுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. தமது அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ள செங்கோட்டையன், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய சூழலில்தான் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார் செங்கோட்டையன்

மிகப்பெரிய திருப்புமுனை

தராசு ஷ்யாம்

இது தொடர்பாகப் புதிய தலைமுறையிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “இந்த நிகழ்வு செங்கோட்டையன் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை. 1970களில் இருந்து ஒரு கட்சியில் பயணத்தைத் துவங்கி, 2025ல் வேறு கட்சிக்கு மாறியிருக்கிறார். ஒரு ஒற்றுமை என்னவென்றால் இரண்டு கட்சியுமே எம்ஜிஆர் கட்சிபோல்தான் இருக்கிறது. இங்கு செங்கோட்டையனுக்கு பொறுப்பு கூடுதலாக கொடுக்கப்போவதாகத்தான் செய்திகள் வருகின்றன. அப்படி அவரை பயன்படுத்திக்கொண்டால் மிக நல்லவிஷயம். செங்கோட்டையன் அதிர்ந்து பேசாதவர்.. ஆனால், அனுபவம் மிக்கவர், தமிழ்நாட்டின் உள்ளும்புறமும் தெரிந்துகொண்டவர். இதையெல்லாம் விஜய் பயன்படுத்திக்கொள்வார் என்றுதான் தெரிகிறது” எனத் தெரிவித்தார்.

செங்கோட்டையனுக்கு என்ன பொறுப்பு?

தவெகவில் செங்கோட்டையனுக்கு நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படவிருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் விஜயுடன், செங்கோட்டையன் இரண்டு கட்டமாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. முதற்கட்ட ஆலோசனையில், விஜய், செங்கோட்டையன், ஜான் ஆரோக்கியசாமி, ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இருந்ததாகவும், இரண்டாம் கட்டமாக விஜய், செங்கோட்டையன், ஜான் ஆரோக்கியசாமி மட்டும் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிகிறது. செங்கோட்டையனுக்கு நிர்வாக குழுவை வழிநடத்தும் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், செங்கோட்டையன் நேரடியாக விஜய்க்கு ரிப்போர்ட் செய்வார் என ஆலோசனையில் முடிவெடுக்கப்படதாகவும் கூறப்படுகிறது.

இபிஎஸ்க்கே பெரும்பங்கு உண்டு

Sengottaiyan

திராவிட ஆய்வாளர் துரை கருணா இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசுகையில், “செங்கோட்டையனுக்கு இப்படிப்பட்ட நெருக்கடியை உருவாக்கியதில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பங்கு உண்டு. பழனிசாமியை அரசியலில் அறிமுகப்படுத்தி அவரது வளர்ச்சிக்கும், அவருக்கு பொறுப்புகள் கிடைக்க உறுதுணையாக இருந்தவரும்தான் செங்கோட்டையன். அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா என இருதலைவர்களிடமும் அணுக்கமாக இருந்தவர். 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்,. இப்படி அதிமுகவில் தொடர்ச்சியாக பணியாற்றிய ஒருவர் அதிமுகவில் வெளியேற்றப்பட்ட உடனே இத்தகைய முடிவை எடுப்பதற்கு தள்ளப்பட்டிருக்கிறார். பெரும்பாலான அதிமுக தொண்டர்களிடையே இது கலக்கத்தைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. செங்கோட்டையன் கொஞ்சநாள் பொறுத்திருக்கலாம் என்றுதான் அதிமுக தொண்டர்கள் சொன்னார்கள். கொங்கு மண்டல அதிமுக என்று ஒரு கட்சியைத் தொடங்கி கொஞ்ச நாள் அமைதியாக இருந்துவிட்டு பின் அதிமுகவை மீட்டெடுப்பதற்கு முயற்சிக்கலாம் என்றெனர். ஆனால், அரசியலில் தனது இருப்பை தக்க வைப்பதற்காக தவெகவில் இணைந்திருக்கிறார். இது தவெகவிற்கு சாதகமான அம்சமாகத்தான் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

எம்ஜிஆர் இமேஜை விஜய்க்கு கூடுதலாக பெற்றுத்தரும்

political critic ravindran Duraisamy

அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி இதுதொடர்பாகப் பேசுகையில், “தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது விஜய்க்கு சாதகமாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு பாதகமாகவும்தான் முடியும். விஜய்க்கு இமேஜ், கூட்டம் சேர்க்கும் தன்மை என எல்லாம் இருந்தாலும், வேட்பாளர்கள் கிடையாது. கமல்ஹாசன் அளவிற்குக் கூட விஜயிடம் வேட்பாளர்கள் இல்லை. பிரசாந்த் கிஷோர் எப்படி வேட்பாளர்களை நிறுத்த முடியாமல் திணறினாரோ அதுபோல் விஜயும் திணறுவார் என்ற கருத்து விஜய் மீது இருந்தது. தவெகவில் செங்கோட்டையன் இணைந்தன் மூலம் அதிமுக அதிருப்தியாளர்களை தமிழகம் முழுவதும் வேட்பாளர்களாக செங்கோட்டையனால் நிறுத்த முடியும். செங்கோட்டையனின் வருகை என்பது எம்ஜிஆர் இமேஜை விஜய்க்கு கூடுதலாக பெற்றுத்தரும். தவெக என்பது அதிமுகவின் பிளவுக்கட்சி என்ற தோற்றத்தை எம்ஜிஆரை முன்னிறுத்தி கொண்டு செல்வார் என்று தெரிகிறது” எனத் தெரிவித்தார்.

தனது வெற்றியை உறுதி செய்திருக்கிறார்

பத்திரிகையாளர் சுவாமிநாதன்

இது தொடர்பாகப் பேசிய பத்திரிகையாளர் சுவாமிநாதன், “அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டவர்கள் அல்லது பழனிசாமிக்கு எதிராக கலகம் செய்ததால் நீக்கப்பட்டவர்கள் – அது, ஓபிஎஸ், டிடிவி போன்றோர் – அவர்கள் எல்லாம் தோல்வி அடைந்த இடம் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவர்கள் தனி ஆவர்த்தனம் மட்டுமே செய்து கொண்டிருந்தார்கள். எந்தவிதமான பிரதான கட்சியிலும் சேராமல் தனியாக மட்டுமே செயல்பட்டுக்கொண்டு இருந்தார்கள். அதனால் அவர்களது வெற்றியே கேள்விக்குறியானது. கோவில்பட்டி போன்ற தொகுதியில் டிடிவி கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தாலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், செங்கோட்டையன் தனியாக அல்லாமல் ஒரு கட்சியுடன் ஐக்கியமாகியிருக்கிறார். அதனால் அதிமுகவிற்கு நெருக்கடியான இடமாகத்தான் மாறும். ஏனெனில் செங்கோட்டையன் ஓபிஎஸ் போன்றோ அல்லது டிடிவி போன்றோ அணிகள் இணைய வேண்டுமென்று நீண்டகாலத்தை விரயம் செய்யவில்லை. செங்கோட்டையன் இனி தவெகவின் ஈரோடு முகமாக இனி பார்க்கப்படுவார். தவெக மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட விமர்சனம் விஜயைத் தாண்டி ஒவ்வொரு மாவட்டத்திற்கான தலைவர்கள் இல்லை என்ற விமர்சனம் இருந்தது. ஈரோட்டில் நன்கு பரிச்சயமான செங்கோட்டையன் தவெகவில் இணையும்போது வேறு சிலரும் தவெகவில் இணைவதற்கான அச்சாரமாக ஆகிவிடும். பிரதான கட்சிகளில் வாய்ப்புகள் மறுக்கப்படுவோர்கூட தவெகவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம். பிரபலத்தன்மை கொண்ட விஜய், உள்ளூரில் செல்வாக்குடன் இருக்கும் செங்கோட்டையன் என இரண்டு விஷயங்களும் இணையும்போது, குறைந்தபட்சம் செங்கோட்டையன் தனது வெற்றியை உறுதி செய்திருக்கிறார். அதோடு ஈரோட்டில் தவெகவின் வளர்ச்சிக்கு குறிப்பிட்ட அளவில் பாடுபடுவார். இது இருதரப்புக்குமே லாபம்” எனத் தெரிவித்தார்.

அவரிடமே கேளுங்கள்

தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்.. அவரிடமே கேளுங்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

தொடர் நேரலை

"அவருடைய அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும்..." - தவெக தலைவர் விஜய்

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறுகையில், "20 வயது இளைஞராக இருக்கும்போதே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை நம்பி அவரது மன்றத்தில் சேர்ந்தவர். மேலும், அந்த சிறுவயதிலேயே எம்.எல்.ஏ என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர். பிறகு, அவரின் அரசியல் பயணத்தில் அந்த இயக்கத்தின் இருபெரும் தலைவர்களின் ஒரு பெரும் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். இப்படி 50 வருடமாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் அவர்களின் அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், அவருக்கும், அவருடன் இணைந்து பயணிக்க நம்முடன் கை கோர்க்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன்

"அவர் அதிமுகவில் இல்லை. அதனால் அதற்கு பதில் சொல்ல அவசியம் இல்லை" - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு.!

தவெகவில் இணைந்த பிறகு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உட்பட தவெக மாநில நிர்வாகிகள் உடனிருந்தனர். முதலில் பேசிய தவெக மாநில நிர்வாகிகள் செங்கோட்டையனை தவெகவிற்கு வரவேற்றுப் பேசினர். தொடர்ந்து செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அதிமுகவில் புரட்சித் தலைவரால் நான் அடையாளப்படுத்தப்பட்டவன். 1972 ஆம் ஆண்டு அதிமுக தொடங்கியபோது எம்.ஜி.ஆர்-க்குப் பின்னால் அணிவகுத்து தொண்டர்களில் நானும் ஒருவன். 1975-ல் பொதுக்குழு நடைபெறும் போது, முழுப்பொறுப்பும் என்னிடம் ஒப்படைத்தார்கள். அந்தப் பணிகளை தலைவர்கள் பாராட்டும் வகையில் முடித்து, அவர் இருக்கும் சத்தியா ஸ்டுடியோவில் சந்திக்கும் போது என்னைக் கட்டிப்பிடித்துப் பாராட்டினார்.

அப்போது இருந்த எதிர்க்கட்சிகள் இந்தக் கட்சி 100 நாட்கள் கூட நடக்காது. 100 நாள் படம் என்று கூறுவார்களே அது போல இதுவும் முடிந்து விடும் எனக் கூறினார்கள்.ஆனால், அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டவர் எம்.ஜி.ஆர். அவரது காலத்தில், 3 முறை முதலமைச்சராக இருந்தவர். பத்தாயிரம் மைல் தூர்த்தில் இருந்த போது கூட வெற்றி பெற்று தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர். அவரின் மறைவுக்குப் பிறகு, இயக்கம் இரண்டு கூறுகளாக போன போது, புரட்சித் தலைவி ஜெயலலிதா வழியின் பயணித்தேன். அவரால் நான் பாராட்டப்பட்டிருக்கிறேன்.

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

பிறகு, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நாங்கள் ஆட்சி நடத்தினோம். காலச்சூழலில் அதிமுக மூன்று கூறுகளாக பிரிந்தது. ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்களை வைத்தோம். ஆனால், அதை செயல்படுத்த முடியவில்லை.

நான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் தான் என கண்டித்து விடுவான் இதுதான் இன்றைய சூழ்நிலை. அதன்படி தான், நான் ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபடும்போது என்னை பொறுப்புகளிலிருந்து நீக்கினார்கள். தொடர்ந்து, தேவர் ஜெயந்தியில் நான் கலந்து கொண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் பேசியதால், என்னைக் கட்சி அடிப்படை உறுப்பினரிலிருந்து கூட என்னை நீக்கினார்கள். கட்சிக்கு ஏற்றத்தாழ்வுகளை கடந்து உழைத்த எனக்கு கிடைத்த எனக்கு கிடைத்தப் பரிசு. என்னை மட்டும் கட்சியிலிருந்து, நீக்கவில்லை. என்னை சார்ந்தவர்களையும் நீக்கினார். அதிமுகவில் இருக்கும் ஒருவர் வீட்டு துக்க நிகழ்வுக்கு சென்றதனால், நீ ஏன் அவரை அனுமதித்தாய் என அவரையும் கட்சியிலிருந்து நீக்கினார்கள்.

இதைத் தொடர்ந்தே, தெளிவான முடிவுக்குப் பிறகு நேற்று எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்திருக்கிறேன். என்னுடைய பயணைத்தை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் ஒரு தூய்மையான ஆட்சி மலர்வதற்கு, ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்கியிருக்கிறார். குழந்தைகள் கூட விஜய்க்கு ஓட்டளிக்க வேண்டும் என பெற்றோர்களிடம் கேட்கும் நிலை, தமிழ்நாட்டில் இருக்கிறது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

காரணம், தமிழ்நாட்டில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதன்காரணமாகவே விஜயின் அரசியல் பயணம் இன்று வெற்றிப்பயணமாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டில் இவர்கள் மட்டும் தான் ஆளவேண்டுமா? தூய்மையான அரசியலை மேற்கொள்வதற்கு வேறொருவர் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். தமிழக மக்கள் தவெகவிற்கு வெற்றியை அளிக்க காத்துக்கொண்டிருக்கிறாகள். 2026 தவெக தலைவர் விஜய் வெற்றி பெறுவார்கள் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசினார். அப்போது, நான் ஒருங்கிணைக்க வேண்டும் என கெடு கொடுக்கவில்லை. 1 மாதமோ 2 மாதமோ ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் தெரிவித்தேன். அது ஊடகங்களில் திரித்துக் கூறப்பட்டுவிட்டது. திமுகவில் இருந்தோ அல்லது வேறு கட்சிகளிலிருந்தோ என்னை யாரும் அணுகவில்லை. சேகர்பாபுவை சந்தித்ததாக ஒரு படத்தையாவது நீங்கள் காட்டிவிடுங்கள். தவெக இன்று நான் வந்ததற்கு காரணம் மாற்றத்திற்காகவே. மேலும், மக்களிடையே தவெகவிற்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. அதனால் தான் ஊடகங்கள் அவரை சுற்றி சுற்றி செய்திகள் வெளியிடுகின்றன. இது, மக்களின் எதிர்பார்ப்பு இருப்பதைக் காட்டுவதாகவே இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, செங்கோட்டையனுக்கு என்ன பதவி கொடுக்கப்படும் என்பதை இன்று மாலை தவெக தலைவர் விஜய் அறிவிப்பார் என தவெக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.