செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி pt web
தமிழ்நாடு

கட்சியில் இருந்து புறக்கணிக்கப்படுகிறாரா செங்கோட்டையன்.. உட்கட்சிப் பூசலா? அதிமுகவில் நடப்பதென்ன?

அத்திக்கடவு அவினாசி திட்ட குழு சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளாததற்கு மூத்த பத்திரிகையாளர்கள் பல்வேறு காரணங்களைத் தெரிவிக்கின்றனர்.,

Angeshwar G

விழாவினைப் புறக்கணித்த செங்கோட்டையன்

அத்திகடவு அவினாசி திட்டக்குழு சார்பில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அன்னூரில் நடைபெற்ற இவ்விழாவில் திருப்பூர், கோவை, ஈரோடு என மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஆனால், முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்நிகழ்வினைப் புறக்கணித்ததாக செய்திகள் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கே.ஏ.செங்கோட்டையன்

இத்தகைய சூழலில் கோபியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்க விழாவில் கலந்துகொண்ட செங்கோட்டையன் நிகழ்விற்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு 2011ல் ஜெயலலிதா 3.72 கோடி ரூபாய் நிதி வழங்கினார். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராமலிங்கம், திட்டத்திற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். இந்தப் பணிகளை துவங்குவதற்குப் பலரும் அடித்தளமாக இருந்திருக்கிறார்கள்.

அத்திக்கடவு அவினாசி திட்ட பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்திருந்த குழுவினர் என்னைச் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அவர்களிடம் விழா மேடை, விளம்பர பதாகைகளில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா போன்றோரின் உருவப்படங்கள் இல்லை என்பதைக் குறிப்பிட்டுச்சொன்னேன்.

அத்திக்கடவு அவினாசி திட்டத்தினை நான் புறக்கணித்தேன் என்று சொல்வதைக் காட்டிலும், நான் முன்பே அக்குழுவினரிடம் என் உணர்வுகளை தெரிவித்துள்ளேன்” என்றார்.

”செங்கோட்டையன் கூறுவது பொருத்தமானதாகத் தெரியவில்லை”

தராசு ஷ்யாம்

இது அரசியல் களத்தில் விவாதப்பொருளானது. எடப்பாடி பழனிசாமி மீதிருக்கும் அதிருப்தியா? அல்லது அதிமுகவில் அடுத்த உட்கட்சிப் பூசலா என்று பல்வேறு விவாதங்கள் எழுந்தன. இது தொடர்பாக பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், “செங்கோட்டையன் கூறும் காரணங்கள் எனக்குப் பொருத்தமானதாகத் தெரியவில்லை. திட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அனைவரது படங்களையும் வைக்க வேண்டும் என்கிறார். பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராமலிங்கம் படம் வைக்க வேண்டும் என்றால், இத்திட்டத்திற்கு ஆரம்பகட்டத்தில் நிதி ஒதுக்கிய அன்றைய அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் புகைப்படத்தினையும் வைக்க வேண்டும்.

எம்ஜிஆர் ஜெயலலிதா படங்கள் இருக்க வேண்டும்தான்; அது அதிமுகவின் அடிப்படை உணர்வு. ஆனால், கூட்டத்தை நடத்துவது விவசாய சங்கங்கள்தானே. விழாவிற்கு போகாததற்கு செங்கோட்டையன் சொல்லும் காரணம் எனக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

ஓரங்கட்டப்படுகிறாரா செங்கோட்டையன்?

மூத்த பத்திரிகையாளர் துரை கருணா, “செங்கோட்டையன் சொல்வதுதான் காரணமாக இருந்தாலும், இபிஎஸ் எதிர்ப்பு எனும் மனநிலை அதிமுக மூத்த தலைவர்களிடம் இருக்கிறது என்பதைத்தான் நான் பார்க்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி

2024ல் அதிமுகவிற்கு ஏற்பட்ட சரிவிற்குப் பின், அதிமுகவின் 6 முன்னணித் தலைவர்கள் கட்சியை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினர். இதற்காக எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்துப் பேசினர். அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்த எடப்பாடி பழனிசாமி, ‘சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறுவது பச்சைப் பொய்’ என்றும் சொன்னார். எனவே, அந்த 6 தலைவர்கள் மட்டுமின்றி பல முன்னணித் தலைவர்கள்கூட எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். அதையும் தாண்டி அந்த 6 தலைவர்களின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் இபிஎஸ் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

கட்சியை உருவாக்கிய தலைவர்களைப் புறக்கணிப்பதை எந்தத் தொண்டரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எடப்பாடி பழனிசாமியே இதை சரிசெய்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.