2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவை முழுமையாக அழித்த துரோகத்தின் மொத்த உருவம் என்று கடுமையாக தாக்குகிறார். ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தன்னை விமர்சிக்க தகுதி இல்லை என கூறி, ஜெயலலிதாவுடன் நீண்ட காலம் இருந்ததைக் குறிப்பிட்டு தன் அரசியல் நம்பகத்தன்மையை வலியுறுத்துகிறார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஒருபக்கம் ஆட்சியை தக்கவைக்கும் மெகா கூட்டணியை அமைத்திருக்கும் திமுக, மறுபக்கம் லெகஸியை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் அதிமுக கூட்டணி, தவெக, நாதக, சசிகலா-ராமதாஸ் என 5 முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், அனைத்துக் கட்சி தலைவர்களும் அனல்பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருவதோடு, மற்ற கட்சியை குறித்து பகிரங்கமாக விமர்சித்தும் வருகின்றனர்.
இந்தசூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை விமர்சித்திருக்கும் செங்கோட்டையன், அதிமுகவை மொத்தமாக அழித்தவர் என்று விமர்சித்துள்ளார்.
பழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், மத்திய மற்றும் மாநில அரசு அமைச்சர்களைக் கடுமையாகச் சாடிப் பேசினார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய அவர், “உடன் இருந்தவர்கள் என அதிமுகவை மொத்தமாக அழித்தவர் எடப்பாடி பழனிசாமி. அவர் துரோகத்தின் மொத்த உருவம். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் என்னைப் பற்றி விமர்சிக்கத் தகுதியே இல்லாதவர். நான் அம்மாவோடு நீண்ட காலம் பயணித்தவன்" என்று விமர்சித்தார்.
தொடர்ந்து 2026 தேர்தல் குறித்துப் பேசிய அவர், "விஜய் போட்டியிடும் தொகுதிகளில் எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் இழப்பார்கள். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தவெக-வின் எழுச்சியைத் தடுக்கவே அரசு மற்றும் காவல்துறை பிரச்சாரத்திற்குப் பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போடுகிறது" எனக் குற்றம் சாட்டினார்.