செங்கோட்டையன், அமித் ஷா எக்ஸ் தளம்
தமிழ்நாடு

செங்கோட்டையன் - அமித் ஷா சந்திப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்.. அடுத்து என்ன?

மத்திய அமைச்சர் அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததும், இதை வெளிப்படையாகவே அவர் பொதுவெளியில் பகிர்ந்துகொண்டிருப்பதும் அதிமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியுள்ளது.

PT WEB

அதிமுகவுக்குள் கலகக் குரல் எழுப்பிய அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான செங்கோட்டையனை மத்திய அமைச்சர் அமித் ஷா சந்தித்ததும், இதை வெளிப்படையாகவே செங்கோட்டையன் பொதுவெளியில் பகிர்ந்துகொண்டிருப்பதும் அதிமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியுள்ளது.

செங்கோட்டையன் - அமித் ஷா சந்திப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் கட்சிக்குள் கலகக் குரலை எழுப்பியதுமே, பாஜக இதன் பின்னணியில் இருக்கலாம் என்ற பேச்சு பரவலாகப் பேசப்பட்டது. முன்னதாக, ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ஆலோசனை கலந்ததாகவும் சொல்லப்பட்டது. ஒன்றிணைந்த அதிமுகவால்தான் திமுகவை எதிர்கொள்ள முடியும் என்ற கருத்தைக் கொண்டவர் குருமூர்த்தி. தமிழகம் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது, பாஜக மூத்த தலைவர்கள் ஆலோசனை கலக்கக்கூடிய இடங்களில் ஒன்று குருமூர்த்தியின் இல்லம். அதிமுகவுடனான கூட்டணியை உறுதிசெய்ய சென்னை வந்திருந்தபோதுகூட குருமூர்த்தி இல்லத்துக்குச் சென்று வந்தார் அமித் ஷா.

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தைப் பொறுத்த அளவில் அதிமுகவை ஒருங்கிணைப்பதையும், திமுகவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைப்பதையுமே தேர்தல் வியூகமாகக் கொண்டிருக்கிறார் அமித் ஷா. இதை அதிமுகவுக்குப் பல்வேறு வகைகளிலும் அவர் வெளிப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி ஒருங்கிணைந்த அதிமுக எனும் கருத்துக்கு முற்றிலும் எதிராக இருக்கிறார். இதனூடாகத்தான் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் அமமுக பொதுச்செயலர் தினகரனும். பாஜக தலைமை இதை விரும்பவில்லை. இதனூடாகத்தான் செங்கோட்டையன் கலகக் குரலை எழுப்பினார். அடுத்தடுத்து வேகமாக நடந்துவரும் இந்த மாற்றங்கள் அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

அமித் ஷாவின் அடுத்த திட்டம் என்ன?

மறுபுறம், அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச்செயலர் தினகரனும் டெல்லிக்கு வரவழைக்கப்படுவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இருவரும் சந்திப்பார்கள் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக - அதிமுக கூட்டணியின் தொடர்ச்சியாக ஏற்பட்ட புறக்கணிப்பின் விளைவாக, பன்னீர்செல்வம், தினகரன் இருவரும் அடுத்தடுத்து பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்கள். ஆயினும், இப்போதும் பாஜக கூட்டணியே தன்னுடைய முதன்மை தேர்வு என்றும் பழனிசாமியை முதல்வர் முகமாக ஏற்க முடியாது என்றும் இந்தப் பிரச்னையைத் தீர்க்க வேண்டியது பாஜகவின் பொறுப்பு என்றும் கூறினார் தினகரன்.

ஓபிஎஸ், டிடிவி தினகரன்

தொடர்ந்து அடுத்த சில நாட்களிலேயே நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தார் பன்னீர்செல்வம் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான தர்மர். ஆக, பன்னீர்செல்வமும் தினகரன் நிலைப்பாட்டிலேயே இருப்பதை இந்த விஷயம் வெளிப்படுத்தியது. இதனூடாகத்தான் அதிமுகவில் பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராகக் கலகக் குரல் எழுப்பியிருக்கும் மூத்த தலைவர் செங்கோட்டையனை அமித் ஷாவை சந்தித்த செய்தி வெளியானது. திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் நோக்கில் உறுதியாக இருக்கும் அமித் ஷா, திமுகவுக்கு எதிரான எல்லாச் சக்திகளையுமே ஒரே குடையின் கீழ்கொண்டுவர விரும்புகிறார். அதன் ஒரு பகுதியாகவே அடுத்தடுத்த சந்திப்புகளும் நகர்வுகளும் திட்டமிடப்படுகின்றன என்கிறார்கள்.