எல்.முருகன் - செங்கோட்டையன் web
தமிழ்நாடு

ஜனநாயகன் பட விவகாரம்| ’எல்.முருகன் பதவி விலகவேண்டும்..’ செங்கோட்டையன் குற்றச்சாட்டு!

ஜனநாயகன் படம் ரிலீஸாவதற்கு முன்பே வெளியானதற்கு அந்தத்துறையின் அமைச்சர் எல்.முருகன் தான் காரணம் என செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Rishan Vengai

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய ‘ஜனநாயகன்’ படம் பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்ட நிலையில், சில காட்சிகள் மீது CBFC ஆட்சேபம் தெரிவித்ததால் சான்றிதழ் தாமதமானது. தேர்தல் காலம், விஜயின் அரசியல் வரவு ஆகிய சூழலில் படம் தள்ளிப்போனது. இதற்கிடையில் ஓப்பனிங் காட்சிகள் முதல் முழுப் படம் வரை இணையத்தில் கசிந்தது திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம், ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. விஜயின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஜனநாயகன்

ஆனால் இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தது CBFC தரப்பு. அதனை தொடர்ந்து பல கட்ட நடவடிக்கைகளுக்கு பின் இப்போது CBFC படத்தை பார்த்துவிட்டது. ஆனால் இன்னும் இப்படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை. இது தேர்தல் சமயம் என்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. விஜயும் அரசியல்வாதியாக களத்தில் இருக்கிறார். எனவே அவர் நடித்த படத்தை இப்போது வெளியிட மாட்டார்கள், தேர்தலுக்கு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தசூழலில் தான் இப்படத்தின் ஓப்பனிங் காட்சிகள், பாடல் காட்சிகள் இணையத்தில் கசிந்ததை தொடர்ந்து பின்னர் முழு திரைப்படமும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது. திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் வெளியான சம்பவம் திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து முன்னணி நடிகர்கள், நடிகைகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தவெக தரப்பில் ஆதவ் அர்ஜுனா மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் உதயநிதியை குற்றஞ்சாட்டிய நிலையில், தற்போது மற்றொரு தவெக நிர்வாகியான செங்கோட்டையனும் எல்.முருகனை குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜனநாயகன் படம் வெளியான விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஜனநாயகன்' படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானதற்கு எல்.முருகன்தான் பொறுப்பு. அந்தத் துறைக்கான அமைச்சர் அவர்தான். கொலை, கொள்ளை நடந்தால் அந்தத்துறை அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என சொல்கிறோம். அப்படியானால் சட்டவிரோதமாக படம் வெளியானதற்கு யார் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை பத்திரிகையாளர்கள்தான் சொல்லவேண்டும்” என பேசியுள்ளார்.