2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிடம் அமைச்சரவையில் பங்கு கேளுங்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் இருந்து இதுவரை எதுவும் சொல்லவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம்.
தமிழ்நாட்டு அரசியலில் கூட்டணி ஆட்சி குறித்தான பேச்சுகள் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடத்தில் பேசிய சிவகங்கை மக்களவை தொகுதி எம்.பி கார்த்திக் சிதம்பரம், கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறுமா என்ற கேள்விக்கு, ”1967ல் இருந்து காங்கிரசுக்கு ஒரு கனவு உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் அதனை காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்ளும்” என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாளான இன்று அவரது, நினைவிடத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக அனைத்து தில்லுமுல்லுகளையும் மேற்கொள்ளும் என்று அச்சம் தெரிவித்தார். இதனை முறியடிக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் முனைப்பாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்ன சொல்கிறதோ அதைத்தான் நாங்கள் செய்ய முடியும். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிடம் அமைச்சரவையில் பங்கு கேளுங்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் இருந்து இதுவரை எதுவும் சொல்லவில்லை” என்று கூறினார்.