செய்தியாளர்: செ.சுபாஷ்
மதுரை மாநகர் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதூர் பேருந்து நிலையம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசுகையில்...
கருணநிதி பலமுறை ஜெயலலிதாவை லாரி ஏற்றிக் கொலை செய்ய முயன்றார்:
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு தாய்மார்கள் காரணமாக அமைவார்கள். தற்போது நடத்தப்படும், அதிமுக கூட்டத்தில் அதிக அளவில் தாய்மார்கள் பங்கேற்கின்றனர். பெண் சிசுக் கொலையை தடுத்து நிறுத்த திட்டமிட்டவர் ஜெயலலிதா. பெண்களுக்காக வாழ்நாள் முழுவதும் சபதம் ஏற்று பல திட்டங்களை செயல்படுத்தினார்.
முதல்வர் ஸ்டாலினை யாராவது அப்பா என்று சொல்வீர்களா?
அதிமுக ஆட்சிக் காலத்தில் காவல்துறையை கண்டால் ரவுடிகள் பயப்படுவார்கள், திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விடும். பொது மக்கள் அச்சத்துடன் இருக்க வேண்டும்.
திமுகவினர் 6 முறை தமிழ்நாட்டில் ஆட்சி செய்துள்ளார்கள். ஒரு திட்டம் எடுத்துக்காட்டும் விதமாக இருக்கிறதா? முதல்வர் ஸ்டாலினை யாராவது அப்பா என சொல்வீர்களா? அப்படி சொன்னால் அசிங்கமாக போய்விடும், அம்மா என்றால் எவ்வளவு உணர்வுப்பூர்வமாக இருக்கும், அப்பா என்றால் தவறாக இருக்காதா?
திமுகவின் ஒரு திட்டத்தையாவது மத்திய அரசு பாராட்டியதுண்டா?
திமுக ஆட்சிக்கு வந்தாலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கலைஞர் ஓர் சிறந்த அரசியல்வாதி அவரிடம் பாடம் கற்றவர் ஸ்டாலின் நல்ல சிறந்த அரசியல்வாதி சிறந்த ஆட்சியை கொடுப்பார் என நினைத்தோம். ஆனால், மிகக் கேவலமான நிலைக்கு சட்டம் ஒழுங்கு சென்றுவிட்டது. திமுக ஒரு மருத்துவக் கல்லூரியையாவது தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார்களா? திமுகவின் ஒரு திட்டத்தையாவது மத்திய அரசு பாராட்டியதுண்டா?
இந்த ஆட்சி தொடர்ந்தால் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்படும்:
திமுக ஆட்சி என்றாலே கலெக்ஷன், கமிஷன், கர்ப்ஷன், இவர்கள் வீட்டுக்குள் சாமி கும்பிடுவார்கள், ஆனால், வெளியே மாற்றிப் பேசுவார்கள், .இந்த ஆட்சி வேசம் போடும் ஆட்சி, இந்த ஆட்சி தொடர்ந்தால் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்படும். தாய்மார்களே நம்மை யார் ஆள வேண்டும் என்பதை எடைபோட்டு முடிவை எடுங்கள். மீண்டும் எடப்பாடி முதல்வராக வருவதற்கு வாக்களியுங்கள்.
நமது வைகை புயல் 2006 தேர்தலில் திமுக மேடை, மேடையாக ஏறி கலைஞர் ஆட்சி தொடரும் என்றார். ஆனால், ஊத்திக்கிறுசு. தற்போது மீண்டும் மேடை ஏறி ஸ்டாலின் ஆட்சி தொடரும் என கூறுகிறார். வடிவேலு மேடையில் ஏறிவிட்டார். இனி ஊத்திக்க போகிறது என்பது உறுதி" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.