செல்லூர் ராஜு, விஜய் pt web
தமிழ்நாடு

கரூர் துயரம்| இருவர் மீது குற்றஞ்சாட்டிய செல்லூர் ராஜூ!

கரூர் கூட்ட நெரிசல் காரணமாக நடந்த உயிரிழப்புகள் குறித்து தனது ஆதங்கத்தைச் செய்தியாளர் சந்திப்பில் வெளிபடுத்தியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

PT WEB

கரூரில் நடந்த தவெக பரப்புரையில் ஏற்ப்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இதற்கு விளக்கமளித்து தவெக தலைவர் விஜய் நேற்று எக்ஸ் தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ’’நான் நிறைய மாவட்டத்திற்கு பரப்புரைக்காகச் சென்றிருக்கிறேன். ஆனால், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது” எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, கரூர் பரப்புரை தொடர்பாகவும் விஜய் வெளியிட்டிருக்கும் காணொளி தொடர்பாகவும் பேசினார்.

செல்லூர் ராஜூ

விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். விஜய் அரசியலில் புதுமுகம். ஆள் ஆளுக்கு விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகமாகவும் விமர்சித்துவிட்டார்கள். அவர்கள் நிர்வாகிகள் செய்தது. கேட்ட இடத்தை கொடுக்கவில்லை. 2010ஆம் ஆண்டு ஜெயலலிதா மதுரைக்கு வந்தபோது லட்சக்கணக்கான மக்கள் வழிநெடுக கூடினார்கள். அப்போது அவரை பார்க்கக்கூடிய கூட்டம் கட்டுக்கோப்பாக இருந்தது. ஆனால், கரூரில் பத்தாயிரம் பேர் கூடும் இடத்தில் வெறும் 27 ஆயிரம் பேர்தான் கூடினார்கள். அங்கு இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது மனதிற்கு வருத்தத்தைத் தந்துள்ளது. தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பேருந்தில் மாவட்டம்தோறும் செல்லாமல் தொகுதி வாரியாகச் செல்ல வேண்டும். இல்லையென்றால், மிகப்பெரிய இடங்களைத் தேர்வு செய்து திடல் போன்ற இடங்களில் முதல்கட்ட பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். பெண்களும் குழந்தைகளும் உயிரிழந்தது வயிற்று எரிச்சலை தருகிறது. இந்த நேரத்தில் விஜயை விமர்சனம் செய்வது சரியாக இருக்காது. ஒரு தலைவராக அவர் தன்னுடைய ஆதங்கத்தை வீடியோவில் சொல்லி இருக்கிறார். அதைத்தான் அவர் சொல்ல முடியும்” என்றார்.

அவரிடம், ”இதில் செந்தில் பாலாஜி சதி செய்துள்ளதாக குற்றம் சாட்டுகிறார்களே” என்பது குறித்த கேள்விக்கு, ”ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். இதுபோன்று உயிர்பலி ஏற்படும் வகையில் எவன் செய்திருந்தாலும் அவன் குடும்பமே விளங்காது” என சாபம் அளித்தார். ”இந்த சம்பவத்திற்கு மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும்தான் காரணம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

விஜய் பரப்புரை கரூர்

தொடர்ந்து, “கரூரில் அதே இடத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டபோது, கூட்ட நெரிசல் ஏற்படும் என அனுமதி மறுத்து பிறகு அனுமதி கொடுத்தார்கள். அதேபோல தவெகவினர் இடம் கேட்டபோது உயிர்பலி ஏற்படும் எனக்கூறி அந்த இடத்தைக் கொடுக்க மறுத்து இருக்க வேண்டும். வேறு அகலமான இடத்தைக் கொடுத்திருக்க வேண்டும். என்ன இருந்தாலும் வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக் கூடாது. விஜய்யால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. காலதாமதமாக வந்துள்ளார். விஜய்க்கு அந்த இடத்தை எந்த அடிப்படையில் கொடுத்தார்கள் என தெரியவில்லை. விஜய் கேட்டதால் கொடுத்திருப்பதாக கூறுவது சப்பைகட்டு கட்டும் நோக்கம்” என்றார்.