தமிழ்நாடு

செல்ஃபி மோகம்: ஆபத்தை உணராமல் காட்டு யானைகள் அருகே செல்லும் சுற்றுலா பயணிகள்

webteam

ஆபத்தை உணராமல் காட்டு யானைகளின் அருகே சென்று சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுக்க முயற்சிப்பதால் வன ஆர்வலர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் குட்டியுடனும் ஆங்காங்கே எஸ்டேட் தேயிலை தோட்டப் பகுதியில் சுற்றித் திரிகின்றது.

இந்நிலையில், சுற்றுலா பயணிகள் யானைகளை பார்ப்பதற்காக அங்கு அத்துமீறி சென்று யானைகளை பார்த்ததோடு புகைப்படமும் எடுத்து வருகிறார்கள். இதனால் யானை மனித மோதல் ஏற்படும் என்ற அச்சத்தில் சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து வால்பாறை அருகே உள்ள கூலாங்கள் ஆறு அருகில் உள்ள வனப் பகுதியில் சுமார் 10 நாட்களாக 12 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக சாலையைக் கடந்து தேயிலைத் தோட்டம் வழியாக கூலங்கள் ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் வனப்பகுதிக்கு செல்கின்றது.

இதை அறிந்த சுற்றுலா பயணிகளும் வால்பாறையில் உள்ள சுற்றுலா கைடுகளும் யானை இருக்கும் இடத்தை அறிந்து ஆபத்தை உணராமல் யானை அருகே சென்று புகைப்படம் எடுக்கவும் செல்ஃபி எடுக்கவும் முயற்சிக்கின்றனர். வனத்துறையினர் அப்பகுதியில் சரிவர இல்லாததால் சுற்றுலா பயணிகளை தடுக்க முடியவில்லை என்று அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனவிலங்கு மோதலை தடுப்பதற்கு வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.