மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள்
மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள் pt desk
தமிழ்நாடு

சுய உதவிக் குழு பெண்களை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகை

webteam

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சி மன்றங்களில் ‘புது வாழ்வு வாழ்ந்து காட்டுவோம்’ உள்ளிட்ட திட்டத்தின் கீழ் மகளிர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுவில் அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதியில் உள்ள பெண்கள், தலைவராகவும் செயலாளராகவும், உறுப்பினர்களாகவும் இருந்து வருகின்றனர். இந்தக் குழுவில் உள்ள நிர்வாகிகள், தினமும் மகளிர் குழுக்கள் செயல்பாடுகள் குறித்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் குழு திட்ட அலுவலகத்தில் விவரங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.

மகளிர் சுய உதவிக்குழு பெண்கள்

இந்நிலையில் தெற்கு திட்டங்குளம் அனைத்து மகளிர் திட்டக் குழு தலைவராக பாலம்மாள் என்பவர் இருந்து வருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் பசுபதிராஜ், தன் மனைவியை குழு தலைவியாக நியமிக்க வேண்டும் என்று அடிக்கடி பிரச்னை செய்து வந்துள்ளார். மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் குழு ஆலோசனைக் கூட்டம் மேலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றுள்ளது. அப்போது திடீரென கூட்டத்திற்கு வந்த பசுபதிராஜ் அங்கிருந்த தமிழ்ச் செல்வி, பாலம்மாள் உள்ளிட்ட பெண்களிடம் தகாத முறையில் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த பசுபதிராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகளிர் குழுக்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தை முற்றுக்கையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.