எனக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லை என்றும் என் மடியில் கணமில்லை, அதனால் வழியில் பயமில்லை என்று தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து சேகர் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
சேகர் ரெட்டியுடன் தமிழக அமைச்சர்களின் தொடர்பு குறித்த தகவல்கள் வெளியாகியிருப்பதாக கூறப்படும் நிலையில், அதில் புகாருக்கு உள்ளான அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
டைரி குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தொழிலபதிபர் சேகர்ரெட்டி புதிய தலைமுறைக்கு தொலைபேசியில் அளித்த விளக்கத்தில், எனக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லை. அதை யார் எழுதினார்கள் என்றும் எனக்கு தெரியவில்லை. அவர்கள் காண்பிக்கும் டைரியில் இருப்பது எனது எழுத்துக்கள் அல்ல. என்னுடைய வீட்டில் அதுபோன்ற டைரி எதுவும் எடுக்கப்படவில்லை. டைரி குறித்த விசாரணைக்கு நான் தயாராக உள்ளேன். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை என் வாழ்க்கையில் இரண்டு முறைதான் நேரில் பார்த்துள்ளேன். அவருடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. எந்த அரசியல்வாதியுடனும் எனக்கு தொடர்பு இல்லை. என்னுடைய தொழில் ட்ரான்ஸ்போர்ட், வருடத்தில் 70 முதல் 80 கோடி ரூபாய் வரை வருமான வரி கட்டி வருகிறேன். அனைத்தையும் சட்டதிற்கு உட்பட்டே செய்து வருகிறேன். வருமானவரி முறையாக செலுத்திய நாங்கள் கெட்டவர்கள், வங்கியில் கடன் வாங்கி கட்டாமல் இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்களா?
மு.க.ஸ்டாலின் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். என்னை குறித்து அவருக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டிருக்கலாம். எனது தொழிலில் கிட்டத்தட்ட 500 வண்டிகள், 300 பொக்லைன் எந்திரங்கள் வைத்துள்ளேன். அனைத்திற்கும் நான் முறையாக வருமான வரிக் கட்டி வருகிறேன். அனைத்திற்கும் கணக்கு வைத்துள்ளேன். அப்படி இருக்க நான் அவர்களுக்கு பணம் கொடுப்பதற்கு என்ன அவசியம் உள்ளது.
இது தொடர்பான செய்தி த வீக் என்ற இதழில் வெளி வந்துள்ளது. தவறான செய்தியை வெளியிட்டதற்காக த வீக் இதழின் மீது ரூ.25 கோடிக்கு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளோம். அனைவரும் ஊடகங்கள் என்ன சொல்கின்றன என்பதைக் கேட்டே பேசுகிறார்கள். எனக்கு மடியில் கணமில்லை, அதனால் வழியில் பயமில்லை. அதனால் நான் இதுவரை எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தேன். இன்றைக்கு இப்படிப்பட்ட குற்றச்சாட்டை என் மீது சுமத்தியதாலேயே நான் வழக்கு தொடர்ந்துள்ளேன்.
என் வீட்டில் பல கோடி பறிமுதல் செய்ததாக கூறினார்கள், ஆனால் என் வீட்டில் இருப்பது ரூ.12 லட்சம்தான். அதுவும் பழைய பணம்தான். புதிய ரூபாய் நோட்டுகள் எடுக்கப்பட்டன என்று கூறுவது தவறான தகவல். தொழில் ரீதியான பண பறிமாற்றம் அனைத்து வங்கி மூலமே செய்து வருகிறேன். அனைத்திற்கும் என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. எனக்கு அரசியல்வாதிகளுடனோ, அமைச்சர்களுடனோ பழக்கம் இல்லை. வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன, தீர்ப்பு எங்கள் மீது குற்றமில்லை என்றே வரும், நாங்கள் தவறு ஏதும் செய்யவில்லை என்று கூறினார்.