சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக, சேகர் ரெட்டி உள்பட மூன்று பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
தொழிலதிபர் சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனவாசலு ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை கடந்த டிசம்பர் மாதம் அதிரடி சோதனை நடத்தியது. இதில் 147 கோடி ரூபாய், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரூ.34 கோடி மதிப்பிலானவை புதிய 2,000 ரூபாய் நோட்டுகள். பல்வேறு சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சிபிஐ கைதுசெய்தது. பின்னர் 5 பேரும் கடந்த 17-ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை சேகர் ரெட்டியை சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் விசாரிப்பதற்காக அமலாக்கப்பிரிவு போலீசார் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். சுமார் 10 மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பின் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளான சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், எழும்பூர் 13-வது குற்றவியல் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.