சேகர் பாபு web
தமிழ்நாடு

”இரவு 12 மணிக்கு கூட பெண்கள் பாதுகாப்பாக செல்கின்றனர்” - அமைச்சர் சேகர் பாபு

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு பேசியுள்ளார்.

Rishan Vengai

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் சேகர் பாபு, இரவு 12 மணிக்கும் பெண்கள் பாதுகாப்பாக செல்கின்றனர் என்று கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். அதேபோல் மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் பல கிலோமீட்டர் நடந்தே மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.

தூத்துக்குடி வன்கொடுமை குற்றவாளி தர்ம முனீஸ்வரன்

சமீப காலங்களில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் தொடர்ந்து நடந்த வண்ணமே இருப்பது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியானதாக இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்தக் குற்றங்கள் அரசியல் ரீதியாகவும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாகவே உள்ளார்கள் என்று திமுக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

இரவு 12 மணிக்கு கூட நகை அணிந்து பாதுகாப்பாக செல்கின்றனர்..

சென்னை எழும்பூரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து இருக்கும் கவலை சார்ந்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “சமுகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், கடந்த 10 ஆண்டுகளில் நடந்த குற்றச்சம்பவங்களை விட, இந்த 5 ஆண்டுகளில் வெகுவாக குறைந்திருக்கின்றன என்று குறிப்பிட்டார். அதேபோல கடந்த ஆண்டுகளை விட தற்போது தான் பெண்கள் தங்களுக்கு நடக்கும் குற்றச்செயல்கள் குறித்து தைரியமாக வெளியே வந்து சொல்கிறார்கள், பெண்கள் தரும் புகாரின்பேரில் தமிழக முதலமைச்சர் அனைத்து நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறார், தமிழகத்தை பாருங்கள், மணிப்பூரை பாருங்கள், குஜராத்தை பாருங்கள் என்று கூறியிருந்தார்.

ஆகவே தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி கண்ட கனவை போல இரவு 12 மணிக்கு கூட பெண்கள் நகை அணிந்து வீட்டிற்கு பாதுகாப்பாக சென்று சேர்கின்றனர். அங்கொன்று இங்கொன்று என நடக்கும் தவறுககளுக்கு கூட உடனடியாக இரும்புக்கரம் கொன்று நடவடிக்கை எடுப்பதை பார்த்துகொண்டிருக்கிறீர்கள். ஆகவே பெண்களுக்கு முழு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் தான் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொள்கிறேன் என்று பேசினார்.