நடிகை அளித்த பாலியல் புகாரில் நாளை ஆஜராகுமாறு சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டியிருந்தது. சம்மன் ஒட்டப்பட்ட சிறிது நேரத்தில் சீமான் வீட்டிலிருந்து வெளியில் வந்த நபர் ஒருவர் சம்மனைக் கிழித்தார். சில நேரங்கழித்து சம்மனைக் கிழித்தது ஏன் என கேள்வி எழுப்ப காவல்துறையினர் சீமானின் வீட்டிற்குச் சென்றனர். அப்போது அங்கிருந்த காவலாளி காவல்துறையினரை உள்ளேவிடாமல் தடுத்துள்ளார். இந்த வாக்குவாதம் தள்ளுமுள்ளுக்கு சென்றது. அப்போது, காவலாளி துப்பாக்கியைத் தூக்கி காவல்துறையினைரை நோக்கி காட்டியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பின் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான அந்தக் காவலாளியை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஓசூரில் இன்று நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் கிருஷ்ணகிரியில் இருக்கும்போது என்வீட்டில் எதற்காக சம்மன் ஒட்டுகிறார்கள்?. இதற்கெல்லாம் அஞ்சுபவன் நான் இல்லை. விசாரணைக்கு நாளை 11 மணிக்குத்தான் வரவேண்டுமென்றால், என்னால் வரமுடியாது.. உங்களால் முடிந்ததைப் பாருங்கள். அவர் திமுக ஆட்சியின்போது மட்டுமே வருவார். ஜெயலலிதா அல்லது எடப்பாடி ஆட்சியின்போது ஏன் வரவில்லை. என்னை சமாளிக்க முடியவில்லை என்றால் அந்தப் பெண்ணை அழைத்து வந்து நிறுத்துவார்கள்.
விசாரணையில் அவர் குற்றச்சாட்டுகளுக்கு சான்று கேட்க வேண்டும். சான்றுகளின் அடிப்படையில்தான், குற்றம் நடந்ததா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஆனால், இது எதுவும் செய்யாமல், நினைக்கும் போதெல்லாம் அந்தப்பெண்னை அழைத்து வந்து இப்படி நாடகத்தைப் போட வேண்டியது.
நாளை தருமபுரியில் கலந்தாய்வு. வளசரவாக்கம் காவல்நிலையம் அங்குதானே இருக்கப்போகிறது. அவசர அவசரமாக வந்தே தீர வேண்டுமென்றால், வரமுடியாது” எனத் தெரிவித்தார்.