செய்தியாளர்: ந.காதர்உசேன்
தஞ்சாவூரில் தமிழ் தேசியப் பேரியக்கம் சார்பில் நடைபெற்ற கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இதையடுத்து அங்கு பேசிய அவர்...
”மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என முழங்கினர். ஆனால், மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சி என மாறிவிட்டது. மக்கள் ஆட்சியை தன் மக்கள் ஆட்சியாக மாற்றிவிட்டனர்.
மாநில சுயாட்சி என பேசிக்கொண்டே மாநிலத்தின் எல்லா உரிமைகளையும் பறிகொடுத்து விட்டனர். தமிழர்களுக்கு இந்த ஆட்சியாளர்கள் எந்தவொரு உரிமையையும் பெற்றுக் கொடுக்கவில்லை. திமுக ஆட்சியால் கச்சத்தீவை மீட்க முடியாது. தமிழ் தேசியத்தால்தான் மீட்க முடியும். தமிழ் தேசிய அரசு மலரும்போது, மீனவர்களின் வாழ்வாரத்தைக் காக்க கச்சத்தீவை மீட்டெடு அல்லது என்னை பிரித்து விடு என்போம்.
சமூக நீதி, மாநில சுயாட்சி, மாநில உரிமை எல்லாம் வெற்று வார்த்தைகள். மாநில சுயாட்சி எனக் கூறி எல்லாவற்றையும் பறிகொடுத்தவர்கள் திமுகவினர். நம் நாடு இறையாண்மை கொண்ட நாடாக இருக்க வேண்டுமானால், அந்தந்த மாநிலங்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும். இதுவே கூட்டரசு தத்துவம்” என்று பேசினார்.