சங்ககிரி ராஜ்குமார் PT
தமிழ்நாடு

”பிரபாகரனுடன் சீமான் இருக்கும் போட்டோவை நான்தான் எடிட் செய்தேன்” இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பகீர்

”நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரன் உடன் இருக்கும் போட்டோவை 'எடிட்' செய்து கொடுத்ததே நான்தான்” என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Prakash J

”நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரன் உடன் இருக்கும் போட்டோவை 'எடிட்' செய்து கொடுத்ததே நான்தான்” என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்..

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் செயல்பட்டு வருகிறார். இவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதையடுத்து தனக்கும் பிரபாகரனுக்கும் இருக்கும் உறவு குறித்து அவ்வப்போது சில தகவல்களை சீமான் தெரிவித்து வருகிறார்.

மறுபுறம் சீமானை விமர்சிப்பவர்கள், அவர் பிரபாகரனை சந்திக்கவே இல்லை என்றும், அவர் சொல்வது எல்லாம் பொய் என்றும் கூறிவருகின்றனர். மேலும், அவர் பிரபாகரனுடன் எடுத்துக்கொண்டதாக காட்டப்படும் படமும் போலியானது என்று தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். சிலர் அவர் சந்தித்தது வெறும் 10 நிமிடங்கள் தான் அதற்கு எப்படி இவர் சொல்வதெல்லாம் நடந்திருக்கும் என்று கூறுகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சீமான் தொடர்பாக அதிர்ச்சியான தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.,

இதுதொடர்பாக அவர் தமது முகநூல் பக்கத்தில், “இவர் (சீமான்), அவரைச் சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால், அந்தப் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்” எனப் பதிவிட்டிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரிடம் புதிய தலைமுறை பிரத்யேகமாக பேட்டி கண்டது. அதிலும் அவர், “அந்தப் படத்தை எடிட் செய்தது நான்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் மக்கள் தொலைக்காட்சியில் வெங்காயம் என்ற சீரியல் செய்து கொண்டிருந்தேன். அந்த சமயம் அங்கு வேலை செய்த செங்கோட்டையன் என்பவர் டிவிடி ஒன்றை கொண்டு வந்தார். அதில் அண்ணன் சீமான் புகைப்படமும் தலைவர் பிரபாகரன் வேறு சில ஆளுமைகளுடன் இருக்கும் புகைப்படமும் இருந்தது. இதில் தலைவரும் அண்ணன் சீமானும் ஒன்றாக இருப்பது போன்று எடிட் செய்து கொடுக்கணும். எதுக்காக என்று நான் கேட்ட போது, அவருக்கு நான் சர்ப்ஃரைஸ் கிப்ட் பண்ணனும் என்று சொன்னார். எனக்கும் அண்ணன் சீமானையும், தலைவர் பிரபாகரனையும் பிடிக்கும். அதனால் அந்த வேலையை ரொம்ப ஆர்வமாக செஞ்சேன்.

கொஞ்ச நாள் கழிச்சு அந்தப் புகைப்படம் அவர் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்ததாக சமூக வலைதளங்களிலும், பத்திரிக்கைகளிலும் வந்தது. அப்போது அது குறித்து செங்கோட்டையனிடம் நான் கேட்டேன். ’ஏதோ அவர் தேவைக்கு பயன்படுத்துகிறார்.. விடுறா தமிழக அரசியல் களத்தில் ஒரு அரசியல் தலைவரை உருவாக்க பயன்படுறதா இருக்கட்டுமே’ என்றார். எனக்கும் சீமானை புடிக்கும் அவரது சிந்தனைகளை உள்வாங்கியவன். அவருடைய தலைமையில் தமிழர் ஒருங்கிணைப்பு நடந்தால் நல்லது என்று நினைத்தேன். ஆனால், தொடர்ச்சியாக பிரபாகரன் குறித்து அவர் சொல்லி வந்தவையும் தற்போது தந்தை பெரியார் குறித்து பேசி வருவதையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் இப்போது சொல்கிறேன்” என்றார்.

அவர் பேசியதை முழுமையாக காண இந்த வீடியோ தொகுப்பை காணவும்..

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் கருத்துக்கு நாதக கொள்ளைப் பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சாட்டை துரைமுருகன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், “2009 லேயே AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டைம் டிராவல் செய்து வரைந்திருப்பான் போல அந்த டுபாக்கூர் பெரியாரிஸ்ட் சங்ககிரி ராஜ்குமார் ! மொத்தம் ஏழு புகைப்படங்கள் இருக்கு எதுடா நீ வரைந்தது?” என்று குறிப்பிட்டுள்ளார்.