ரஜினிகாந்த்தின் அரசியல் முடிவை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசியலில் தன்னுடைய எதிர்கால
திட்டம் குறித்து பேசினார். குறிப்பாக கட்சி தொடங்கினால் தான் பின்பற்றப்போகும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
அதில், ''முதல்வர் பதவியை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகுதான் நான் அரசியலுக்கு வருவேன். ரஜினி முதலமைச்சர் இல்லை என பட்டி தொட்டியெங்கும் எழுச்சி ஏற்படுத்துங்கள். மக்களிடம் எழுச்சி ஏற்பட்ட பின் நான் அரசியலுக்கு வருகிறேன். 45 வயதுக்குள் இளைஞர்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார். மேலும் இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தல், கட்சி தலைமை வேறு, ஆட்சித் தலைமை வேறு போன்ற சில திட்டங்களையும் அவர் கூறினார்.
ரஜினிகாந்தின் இந்த அரசியல் திட்டங்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், “ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம். இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடி வருகிறோம். அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்” என தெரிவித்துள்ளார்.