seeman
seeman pt desk
தமிழ்நாடு

விஷச்சாராய மரணம்: முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் குறித்து சீமான் கடும் விமர்சனம்! என்ன சொன்னார் அப்படி?

webteam

தூத்துக்குடியில் வரும் 18 ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி நாள் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் சென்றார்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர் “விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்த பலர், இறக்கவில்லை என்றால் இன்று வரை அங்கு சாராயம் ஓடிக்கொண்டு தான் இருக்கும். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு 10 லட்சம்? 1,558 பேரை கைது செய்து இருக்கீறீர்கள். அவர்களிடம் இழப்பீடு வாங்கி இருக்கலாம். அதைவிடுத்து மக்கள் வரிப்பணத்தை எவ்வாறு கொடுக்கலாம்? நாட்டை பாதுகாத்தவர்களுக்கும், சிங்களர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களுக்கும் ஏன் 10 லட்சம் கொடுக்கவில்லை?

cm stalin

இந்திய ராணுவத்தில் நாட்டின் பாதுகாப்புப் படை இளம் வீரர்கள் பஞ்சாப்பில் இரண்டு பேர் இறந்தார்கள். இந்திய கட்சியும், தமிழ்நாட்டை ஆளும் அரசும், அந்த குடும்பத்திற்கு என்ன நிதி அளித்தார்கள்? இது எந்த மாதிரியான செயல்? வேங்கைவயலுக்கு உங்களால் போக முடியவில்லை? கள்ளச்சாராயம் குடித்தவர்களை சென்று பார்க்க போறீங்க... அப்போ அந்த செயலை ஊக்கப்படுத்தி இருக்கிறீர்களா? இது தான் திராவிட மாடல் அரசின் சாதனை.

அங்குள்ள மாமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர், காவல்துறை அதிகாரிகள்... இவர்களுக்கு தெரியாமல் அங்கு இந்த சம்பவம் நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? அப்படி என்றால் ஏன் பணியிட மாற்றம் செய்கிறீர்கள்? சட்டசபையில் பான்பராக்கை ஒழித்து விட்டோம்.. குட்காவை ஒழித்து விட்டோம் என்று கூறுகின்றனர். கள்ளச்சாராயத்தை மக்களுக்கு கொடுத்து ஒழித்து வீட்டீர்கள் போலும்.

EPS

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு அருணா ஜெகதீசன் அறிக்கையில் எந்த நடவடிக்கையும் இல்லை. மனு கொடுக்க வந்த மக்கள் கலவரம் செய்வார்கள் என்று எப்படி நீங்கள் கணித்தீர்கள்? சுடச் சொல்லி உத்தரவு பிறப்பித்தது யார்? எங்கே இருந்து உத்தரவு வந்தது? எப்படி நீங்கள் தயாரானீர்கள் என்று தெரிந்து கொள்ள நினைக்கின்றோம். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களுக்கு பணியிடம் மாற்றம் கொடுத்து விட்டீர்கள். சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

தொடர்ந்து அவரிடம், தமிழக முதல்வர் பதவிவிலக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிவே, அதற்கு பதிலளித்த அவர்,

“கொடநாடு கொலை வழக்கில் ஏன் இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கவில்லை? முதன்மையான முதலமைச்சர் வாழ்ந்த இடம் அது! ஒரு நிமிடம் கூட மின்சாரம் அணையாது. அப்படி இருக்கும் போது மின்சாரத்தை அணைத்து கொன்றது யாருடைய ஆட்சியில்? அந்த நிகழ்வுக்கு பொறுப்பேற்று ஏன் எடப்பாடி பதவி விலகவில்லை?

hospital

கொடநாடு வழக்கை ஆட்சிக்கு வந்ததும் 2 மாதத்தில் விசாரிப்பதாக சொன்ன முதல்வர் ஸ்டாலின், இப்போது இரண்டு வருடம் ஆகிறது.. வாய் திறந்திருக்கிறாரா? அவசரம், அவசரமாக பேனாவை கட்டுவதற்கு அத்தனை கோடியா? சமாதியில் பேனாவை இப்படித்தான் கட்டுவீர்களா? தமிழ்நாட்டில் மின்சாரம் பல பகுதியிலும் இல்லாமல் இருக்கிறது. ஆனால், மின் கட்டணம் மட்டும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றால் மாற்றம் தேவைப்படுகிறது.

அண்ணாமலை, திமுக சொத்து பட்டியலை வெளியிடுகிறார். ஆனால், அதிமுகவில் இருந்து ஊழல் பட்டியலை அளிக்க வேண்டும். கூட்டணியில் உள்ளதால் கூறமாட்டார்கள். அப்ப நேர்மையற்ற தன்மை தானே இது” என்றார்.