தலைமைதமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்பதால் எந்த பயனும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
பிகாரைத் தொடர்ந்து, 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை தமிழகம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் ஆணையம் தொடங்கவிருப்பதாக, கடந்த அக்டோபர் மாதம் 27, ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்நிலையில், அவசரகதியில் எஸ்.ஐ.ஆர் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மேலும், இக்கூட்டத்தில் பங்கேற்க திமுக கூட்டணி கட்சிகள், கூட்டணியில் இல்லாத தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா, அமமுக பொதுச் செயலர் தினகரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்துக்கு செல்வதால் எந்த பயனும் இல்லை என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
சென்னை அம்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை இத்தனை ஆண்டுகள் விட்டுவிட்டு தற்போது கொண்டு வர என்ன தேவை உள்ளது என கேள்வி எழுப்பினார்.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கத்தில் தீவிரம் காட்டுவது ஏன் என வினவிய சீமான், பிகாரில் இருந்து தமிழகத்தில் குடியேறியவர்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும், அவர்களது வாக்கு பாஜகவுக்கு செல்ல வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்றும் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தால் எந்த பயனும் இல்லை என்பதால் நாம் தமிழர் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காது என தெரிவித்துள்ளார்.