ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பு பெருமகிழ்ச்சி அளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், “அகில இந்திய மருத்துவத் தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு சட்டமியற்ற வலியுறுத்தியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புச்செய்தி கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். இத்தீர்ப்பு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக ஒருமித்து ஓங்கி ஒலித்திட்ட தமிழக மக்களுக்குத் கிடைத்த வெற்றியாகும்.
சமூக நீதியை நிலைநாட்ட உழைத்திட்ட, அதற்காகக் குரல்கொடுத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஓபிசி இடஒதுக்கீடு வழக்கில் மாநில அரசு மற்றும் எம்.சி.ஐ. அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து முடிவெடுக்க வேண்டும் எனவும் 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.