தமிழ்நாடு

``செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா?”- அண்ணாமலைக்கு சீமான் கேள்வி

நிவேதா ஜெகராஜா

“விலைவாசி உயர்வு தொடர்ச்சியாக நீடித்தால் கூடிய விரைவில் இலங்கை நிலை இந்தியாவிற்கும் ஏற்படும்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

புலவர் கலியபெருமாள் 13வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை போரூர் அருகே உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி இன்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வீரவணக்கம் செலுத்தி உறுதி மொழி ஏற்றுக்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், “16 ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமண விழாவில் அவரை (புலவர் கலியபெருமாள்) சந்தித்தபோது, அவரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்றை எனக்கு வழங்கினார். தன் வாழ்நாள் அனுபவத்தை சுருக்கி எழுதிய அப்புத்தகத்தில் `மக்களை அணி திரட்டி அரசியல் படுத்தாமல் புரட்சியை முன்னெடுக்க முடியாது’ என்ற கடைசி 2 வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது” என்றார்.

தொடர்ந்து தமிழகத்தில் நிலவும் நூல் விலை உயர்வு மற்றும் போராட்டங்கள் குறித்து முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் உங்களின் நிலைபாடு என்ன என்ற பத்திரிகையாளர்கள் தரப்பில் சீமானிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பின்னலாடை துறை மட்டுமன்றி, ஒவ்வொரு துறையாக பார்த்தால் அதன் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இது தொடர்ந்து நடந்து வந்தால் கூடிய விரைவில் இலங்கை நிலை இந்தியாவிற்கும் ஏற்படும்” என‌ எச்சரித்தார்.

தொடர்ந்து தமிழக அரசின் சொத்து வரி உயர்வை குறித்து பேசிய அவர், “தமிழகத்தில் சிற்றூர்களை தவிர்த்து 80 சதவிகித மக்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அரசின் இந்த செயல்பாட்டால் இரட்டிப்பான வாடகைசெலுத்தும் நிலை பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் அரசுக்கு வரி பெருக்கு உள்ளது. ஆனால் மக்களுக்கு வருமான பெருக்கு இல்லாத நிலை உள்ளது. எந்தவொரு விஷயமாக இருந்தாலும், தமிழக முதல்வரும் அண்ணன் எடப்பாடியாரும் பிரதமருக்கு கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு போர்க்கால அடிப்படையில் துரிதமாக நடவடிக்கை எடுக்கும் விஷயங்களை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

இவற்றை தொடர்ந்து `இந்து ஈழம் அமைப்போம்‌’ என்ற அண்ணாமலையின் கருத்திற்கு, "செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிதிறோமா? இதுவரை முகாம்களில் உள்ள இந்துக்களுக்கு குடியுரிமை வழங்காதது ஏன்?" என கேள்வி எழுப்பினார் சீமான். மேலும் பேசுகையில் காங்கிரஸ் கட்சியை வலுவான தலைமை இல்லாத காரணத்தால், தலை இல்லாத முன்டமாக பார்க்கிறேன். அதேநேரம் காங்கிரஸ் கட்சியின் 2024 தேர்தல் கொள்கையில் ஒன்றான `5 வருட ஆட்சியில் 1 தலைவருக்கு 1 பதவி தான்’ என்ற நிலைப்பாட்டை வரவேற்கிறேன்” என்று கூறினார். மேலும் `எம்மொழியும் கற்கலாம்; ஆனால் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ என்ற கமல்ஹாசன் கருத்தை வரவேற்பதாகவும் தெரிவித்தார் அவர்.