தமிழ்நாடு

வைரமுத்துவிற்காக ரஜினி முன் நிற்காதது ஏன்?: சீமான் கேள்வி

வைரமுத்துவிற்காக ரஜினி முன் நிற்காதது ஏன்?: சீமான் கேள்வி

rajakannan

வைரமுத்து விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறி வைரமுத்துவிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே வைரமுத்துவிற்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

வைரமுத்துவிற்கு ஆதரவாக சீமான் செய்தியாளர்களிடம், “ஆண்டாள் எங்களுடைய மூதாதையர். ஆண்டாளின் திருப்பாவை, நாச்சியார் திருமொழி தமிழிலே பாடப்பெற்றது. ஆனால், அவருடைய கோயிலேயே தமிழில் பாடுவதில்லை என்பது அவருக்கு செய்யும் துரோகம் அல்லவா. ஆண்டாளுக்கு எதிராக வைரமுத்து எந்தவொரு கருத்தையும் முன் வைக்கவில்லை என்பது என் கருத்து. வைரமுத்து பேசிய அந்தக் கருத்தை ஒருவர் பேசி இருக்கிறார் என்று எடுத்து வைக்கிறார். அதுவும் ஆண்டாள் மீது பக்தி உள்ளவர்கள் இதனை ஏற்கமாட்டார்கள் என்றே குறிப்பிட்டும் இருக்கிறார். 

வைரமுத்து ரஜினியை நண்பரா பார்க்கிறார். ஆனால் வைரமுத்துவை ரஜினி எப்படி பார்க்கிறார் என்பது இப்பொழுது தெரிகிறது. வைரமுத்துவின் தமிழால் வளர்ந்தவர்கள், இந்த நேரத்தில் அவருக்காக நிற்க வேண்டும். சில தரப்பினரின் நன்மதிப்பு போய்விடும்,  வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்று அமைதி காக்கிறார்கள். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் யாரும் இல்லை. நமக்கென்று வரலாறும் இல்லை. எல்லாமே இலக்கிய குறிப்புகளும், இலக்கிய சான்றுகளும் தான் உள்ளது. 

ஹெச்.ராஜா பேசியது தவறு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். வைரமுத்து விவகாரத்தில் வம்படியாக அரசியல் செய்வது நல்லதல்ல. வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னர் மறக்க வேண்டும். மறப்பதும் மன்னிப்பதும் தான் தமிழர் பண்பாடு. கருத்து கூறியவர்களின் தலையை வெட்டுவதாகக் கூறுவது இழிவான அரசியல்” என்றார்.