திண்டுக்கல் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனைப் பெற்றுத்தர தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள குரும்பபட்டி கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட கிருபானந்தன் என்பவரை குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு தமிழக அரசு வாய்ப்பு ஏற்படுத்தியிருப்பது ஜனநாயக துரோகம். இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான தண்டனைச் சட்டங்களை கடுமையாக்கி, அவர்கள் மீதான வழக்கை தனி நீதிமன்றங்கள் மூலம் விரைந்து விசாரித்துத் தண்டனை அளிப்பதனால் மட்டுமே இத்தகைய குற்றங்களை அடியோடு அகற்ற முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.