தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் முதன்முறையாக தேர்தலை சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் இடையே 4 முனைப்போட்டி நிலவுவதாக பார்க்கப்பட்டது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகமே வெற்றி பெறும் எனத் தெரிவித்திருந்தன. அதேபோலவே, பத்திரிக்கையாளர்களும் தவெக வெற்றி பெற வாய்ப்பில்லை. ஆனால், ஓரளவு வாக்கு சதவீதத்தை மற்றும் பெறும் எனத் ஊடகங்களில் பேசிவந்தனர்.
ஆனால், வாக்குப்பதிவு நாளான மே-4 ம் தேதி அத்தனை கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி நிலைமை தலைகீழாக மாறியது. அன்றைய தினம், வாக்குப்பதிவு தொடங்கிய காலை 8 மணிக்கு முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போதிலிருந்தே தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலையில் சென்றது. ஒருகட்டத்தில் அப்போதைய ஆளுங்கட்சியான திமுக மூன்றாவது இடத்திற்கு கூட சென்றது. எனினும், வாக்குப்பதிவின் இறுதியில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது. திமுக தலைமையிலான கூட்டணி 73 இடங்களை வென்று எதிர்க்கட்சியானது. அதேசமயம், அதிமுக கூட்டணி 53 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது.
தவெக வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்க போதிய இடங்கள் கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கிறது. இதற்கிடையில், அதிமுக திமுக கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்க முயற்சி நடந்ததாக பல்வேறு தரப்பிலிருந்து தகவல் வெளியாகின. அதிமுக - திமுக கூட்டணி எனும் தவறை தாங்கள் தடுத்து நிறுத்தியதாக வெளிப்படையாகவே, சிபிஎம் தெரிவித்திருக்கிறது. இந்த விவகாரம் இன்று வரை பேசுபொருளாகி வரும் நிலையில், இன்னும் சில மாதங்களில் வரவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 1 தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை பொதுவேட்பாளராக அறிவிக்கவுள்ளதாக முக்கியத் தகவல் ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு மற்றும் அதிமுக உறுப்பினர்கள் ராஜினாமா செய்த மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை மற்றும் விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கு இன்னும் சில மாதங்களில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான, பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தசூழலில் தான், ஆளும் தவெக அரசை வீழ்த்தும் நோக்கில் அம்பாசமுத்திரம் தொகுதியில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலினும், சீமானும் அருகருகே அமர்ந்திருந்ததுடன், இருவரும் உரையாடிக்கொண்டும் இருந்தனர். இந்தசூழலில் தான், அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் பொதுவேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற கருத்து தற்போது வெளியாகியிருக்கிறது. இது உறுதிசெய்யப்படாத தகவலாகவே இருக்கும் நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி வைக்காத சீமான் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் பொதுவேட்பாளராக நிறுத்தப்படுவரா? அவ்வாறு நிறுத்தப்பட்டாலும், பல்வேறு தோல்விகளுக்குப் பிறகு, திராவிட கருத்தியலை எதிர்ப்பதில் உறுதியாக நாம் தமிழகர் கட்சியுடன் இருந்து வரும் அக்கட்சியின் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா? எனவும் கேள்வி எழுந்திருக்கிறது.
அதேபோல, திருச்சி கிழக்கு தொகுதியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடவுள்ளதாக தகவல் பரவிய நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் இது குறித்து கேட்டபோது, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.