சீமான் Pt web
தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சி | 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிப்பு.. காரைக்குடியில் சீமான்!

திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் ”மாற்றத்தை விரும்பு மக்களின் மாநாடு” நடைபெற்றது. இம்மாநாட்டில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 234 தொகுதி வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

Premkumar S

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இதில் 234 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, சீமான் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை வேகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தான், 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 8 சதவீதம் வரை வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சியும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இன்று, 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் ஆலம்பட்டிப் புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற்றது. ஏற்கனவே, இந்த மாநாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மாநாட்டின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.

மாநாட்டு மேடை

இந்த சூழலில் தான், இன்று மாலை 6 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடியேற்று வைத்து மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசினார். அப்போது, 117 பெண்கள் மற்றும் 117 ஆண்கள் என 234 வேட்பாளர்களுக்கு மாநாட்டு மேடையில் இடமளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பேசிய மாநாட்டில் பேசிய சீமான், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்களையும், தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். அதன்படி, சீமான் தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் உள்ள காரைக்குடி தொகுதியில் போட்டியிடவுள்ளார். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் சிவகங்கைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 16 சதவீதத்திற்கு மேலான வாக்குகளைப் பெற்று டெபாசிட் தக்க வைத்திருந்தது. இதன்காரணமாக, சீமான் தான் போட்டியிடுவதற்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், ஆயிரம் விளக்கு தொகுதியில் திரைப்பட இயக்குநர் மு. களஞ்சியம், வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்திக், சேப்பாக்கம் தொகுதியில் ஆயிஷா பேகம், காஞ்சிபுரம் தொகுதியில் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதன் பேத்தி வெற்றிச்செல்வி, மேட்டூர் தொகுதியில் வீரப்பன் மகள் வித்யாராணி வீரப்பன் உள்ளிட்ட பலரும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். வேட்பாளர்களில், 33 பேர் வழக்கறிஞர்கள் மற்றும் 15 மருத்துவர்கள் என்பது குறிப்படத்தக்கது.