சீமான் web
தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர்.. ’இது விபத்து இல்லை’ என்று சீமான் குற்றச்சாட்டு!

கண்ணகி நகரில் தூய்மைப் பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு காலணி கூட வழங்கப்படாதது நிர்வாக சீர்கேட்டின் உச்சம் என சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

PT WEB

சென்னை கண்ணகி நகரில் தூய்மைப் பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த வரலட்சுமி என்ற தூய்மை பணியாளருக்கு இழப்பீடு அதிகமாக கொடுக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்தார்.

சென்னை கண்ணகி நகரில் தூய்மைப் பணியின்போது மின்சாரம் தாக்கி வரலட்சுமி என்ற தூய்மை பணியாளர் உயிரிழந்தார். அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில், உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூய்மை பணியாளர் வரலட்சுமி இறந்ததை விபத்து என கூறமுடியாது என்றும், இந்த இழப்பீடு போதாது ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

விபத்து என்று கூறமுடியாது..

தூய்மைப் பணியாளர் மரணம் குறித்து பேசிய சீமான், ”அரசு மற்றும் அரசு அதிகாரிகளுடைய அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளது, சகோதரி வரலட்சுமி இறந்ததை விபத்து என கூற முடியாது. அரசு மற்றும் அரசு அதிகாரிகளுடைய அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே 19ஆம் தேதி இந்த குறிப்பிட்ட பகுதியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது என புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தூய்மை பணியாளர்களை தனியாரிடம் ஒப்படைத்து அவர்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க இந்த அரசு தவறிவிட்டது.  கொடுக்கப்பட்டுள்ள இருபது லட்ச ரூபாய் போதாது. வரலட்சுமியின் கணவருக்கு தோல் நோய் உள்ளது. இரண்டு குழந்தைகளும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். வரலட்சுமி உயிரோடு இருந்து வாழ்நாள் முழுவதும் சம்பாதித்தால் 85 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியும். 

தூய்மை பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்து அவர்களது உரிமையை பறித்து வருகிறார்கள். கியூபா சோசியலிசத்தை வலியுறுத்தி கூட்டம் நடத்தும் முதல்வர் அவர் ஆட்சியில் சோசியலிசத்தை ஏன் பின்பற்றுவது இல்லை.

கண்ணகி நகர் முழுவதிலும் பல இடங்களில் மின் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் அரசு விரைவாக இந்தப் பகுதியை ஆய்வு செய்து சென்னையின் பூர்வ குடிகளை காப்பாற்ற வேண்டும்” என பேசியுள்ளார்.