திருவாரூர் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு தேர்தல் நடத்தை விதிகள் முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டுள்ளன.
திமுக தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து காலியாக அறிவிக்கப்பட்ட திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்களை கவரும் வகையில், வாகனங்களில் பணம், மது பாட்டில்கள் ஆகியவற்றை தொகுதிக்குள் எடுத்துச் செல்ல முயற்சிக்கலாம் என்பதால், 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் உதவி ஆய்வாளர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொகுதிக்குள் வரும் வாகனங்களை தீவிரமாக தணிக்கை செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது.
மேலும் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி பதாகைகள், சுவர் விளம்பரங்கள் போன்றவற்றை அகற்றவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியை பொறுத்தவரை மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 687 வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதில் பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 169 பேரும், ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 பேரும் உள்ளனர்.