தமிழ்நாடு

பாதுகாப்பு காரணம்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி சிறைக்கு மாற்றம்

kaleelrahman

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக மதுரை மத்திய சிறையில் இருந்து திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார்.

அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த வழக்கில், கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று மதியம் கர்நாடக மாநிலம் ஹாசனில் தனிப்படை காவல்துறையால் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அவரை போலீசார் அழைத்து சென்றனர்.

இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், அவருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மற்றும் கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி மதுரை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர், பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக அவர் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து ஆவண பணிகளை முடித்து சுமார் அரைமணி நேரத்திற்குப் பிறகு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் அவர் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ராஜேந்திர பாலாஜியை, வரும் 20ஆம் தேதி வரை சிறையிலடைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.