தெற்கு ரெயில்வே web
தமிழ்நாடு

PT EXCLUSIVE | தெற்கு ரயில்வே கோட்டத்தில் பாதுகாப்பு குறைபாடு.. RTI மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்!

தெற்கு ரயில்வே கோட்டத்தில் பாதுகாப்பு குறைபாடு குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது..

PT WEB

தெற்கு ரயில்வே கோட்டங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் நீடிப்பதை உணர்த்தும் வகையில், சென்னைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை செயற்பாட்டாளர் தயானந்தன் கிருஷ்ணன் எழுப்பிய RTI கேள்விக்கு தெற்கு ரயில்வே வழங்கிய பதில், பல முக்கிய நவீனமயமாக்கல் தொழில்நுட்பங்கள் முழுமையாக செயல்படுத்தப்படாததை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

Indian Railways

பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் மின்னணு இன்டர்லாக்கிங் (EI), தானியங்கி தொகுதி சமிக்ஞை (ABS), ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பு (TPWS) மற்றும் ரயில் மோதல் தவிர்ப்பு கவாச் (KAVACH) போன்ற முக்கிய அமைப்புகள் தெற்கு ரயில்வேயில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் அமல்படுத்தப்படாத நிலை தொடர்கிறது.

பாதிக்கு மேல் மந்தமான நவீனமயமாக்கல்..

குறிப்பாக தெற்கு ரயில்வேயில் 492 நிலையங்களில் 250 இடங்களில் மட்டுமே மின்னணு இன்டர்லாக்கிங் EI அமைப்பு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், 242 நிலையங்கள் இன்னும் நிறுவப்படாதது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. EI அமைப்பு உள்ள பகுதிகளில் கேட் சரியாக மூடப்படாத வரை ரயில் இயக்கத்திற்கு அனுமதி கிடைக்காது. முந்திய ஸ்டேஷனில் இருந்தே ரயில் இயக்கம் தானாகத் தடுக்கப்படும் இந்த பாதுகாப்பு நடைமுறை, விபத்துகளை தவிர்க்கவும், மனிதப் பிழையை குறைக்கவும் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் மதுரை கோட்டில் EI இல்லாத கிராசிங்களில் கேட் திறப்பு–மூடுதல் முதல் சிக்னல் ஒத்துழைப்பு வரை அனைத்தும் கேட் பணியாளர்களின் கையால் நடத்தப்படுவது பாதுகாப்பு ஆபத்துகளை அதிகரிக்கின்றது.

ரயில்வே

மனிதர்கள் மீது மட்டுமே நம்பிக்கை வைத்திருக்கும் இந்த முறை, தவறுகளுக்கான வாய்ப்பை உயர்த்தி, ரயில்–வாகன மோதல்களுக்கு வழிவகுக்கும் சூழலையும் உருவாக்குகிறது. பயணிகள், வாகன ஓட்டிகள், கேட் பணியாளர்கள் என மூன்று தரப்பினரின் உயிர் பாதுகாப்பும் மனிதர் சார்ந்த செயல்பாடுகளின் மீது மட்டுமே நிலைநிற்கும் சூழல் தொடர்கிறது. இதே நேரத்தில், இந்த அமைப்பிற்கான செலவும் உயர்ந்ததாக உள்ளது. ஒற்றை லைனில் இரண்டு பாதை கொண்ட EI அமைப்பிற்கு ரூ.9.76 கோடி முதல் இரட்டை லைனில் ஐந்து பாதை கொண்ட அமைப்பிற்கு ரூ.14.48 கோடி வரை செலவாகிறது.

தானியங்கி தொகுதி சமிக்ஞை (ABS) அமைப்பும் தெற்கு ரயில்வே முழுவதும் பரவலாக செயல்படுத்தப்படவில்லை. 5084 கிலோமீட்டர் நீளத்தில் ABS அமல்படுத்தப்பட வேண்டும், ஆனால் 495.73 கி.மீ மட்டுமே இதுவரை நிறைவு செய்யப்பட்டுள்ளது. மொத்த தூரத்தின் 84% க்கும் அதிகமான பகுதி இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த அமைப்பு ரயில்கள் இடையேயான தூரத்தை தானியங்கியாக கண்காணித்து, விபத்துகள் ஏற்படாமல் தடுக்க உதவினாலும், செயல்பாட்டு முன்னேற்றம் மிக மந்தமாக உள்ளது. பல பிரிவுகள் இன்னும் பழைய கையேடு சிக்னல் முறையையே நம்பி செயல்படுகின்றன.

ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பு TPWS, சென்னை–கட்பாடி மற்றும் சென்னை–அரக்கோணம் பிரிவுகளில் மட்டுமே தற்போது செயல்படுகிறது.இதன் பயன்பாடு மிக அவசியமானதாகும். இருப்பினும், தெற்கு ரயில்வே கோட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இது இன்னும் அமல்படுத்தாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரயில் சேவை

ரயில்கள் இடையே மோதல் தவிர்க்கும் கவாச் (KAVACH) அமைப்பும் தெற்கு ரயில்வேயில் பெரும்பாலான தடங்களில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.5084 கி.மீ தூரத்தில் இந்த அமைப்பு கொண்டு வரப்பட வேண்டிய நிலையில், 1984 கி.மீ தூரத்தில் மட்டும் பணி நடைபெறுகிறது; மீதமுள்ள 3100 கி.மீ தூரம் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. ஒரு கி.மீக்கு ரூ.0.64 கோடி செலவில் நிறுவப்படும் என்றாலும், செயலாக்கம் முழு வேகத்தில் நடைபெறவில்லை.

RTI பதிலில் வெளிவந்த இந்த தகவல்கள், தெற்கு ரயில்வேயின் பாதுகாப்பு மேம்பாட்டு திட்டங்கள் வேகமின்றி போகின்றன என்பதையும், பல பிரிவுகளில் நவீனமயமான தொழில்நுட்பங்கள் இன்னும் அடிப்படை நிலையிலேயே உள்ளன என்பதையும் தெளிவுபடுத்துகின்றன.

தெற்கு ரயில்வேக்கு தேவையான நிதிகளை மத்திய அரசு வழங்காமல் இருப்பது பாதுகாப்பு மேம்பாட்டை பாதிக்கிறது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து அரசியல் லாபம் நாடுவதில் மட்டுமே மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது. ஆனால் ரயில்வேயின் அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு, பயணிகளின் உயிர் பாதுகாப்பு போன்ற முக்கிய அம்சங்களில் எந்தத் தீர்மான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் துறையின் செயல்பாடே கேள்விக்குறியாகியுள்ளது என அவர் கூறினார்.

சு. வெங்கடேசன்

ரயில்வே துறையிலுள்ள அதிகாரிகளே இந்த நிலைகளில் விபத்துகள் நடக்காமல் ரயில் இயக்குவது அதிசயமாக உள்ளது என வருத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ரயில்வே ஆலோசனை குழு செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என தொடர்ச்சியான வலியுறுத்தலின் பின்னர், வருகிற செவ்வாய்க்கிழமை டெல்லியில் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற இருப்பதையும் அவர் கூறினார்.

அந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, குறிப்பாக தெற்கு ரயில்வேக்கு தேவையான முதற்கட்ட பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து முக்கியமாக பேசப்படும் எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.