நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசை ஆதரித்த எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 122 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் வெற்றிபெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். மக்களின் கருத்துக்கு எதிராக எம்எல்ஏக்கள் வாக்களித்ததாக குற்றம்சாட்டி, அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்த இருப்பதாக பல்வேறு அமைப்பினரும் அறிவித்துள்ளனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏக்களின் வீடுகள், அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரின் வீடுகளுக்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏ சக்திவேலை கடந்த சில நாட்களாக காணவில்லை என்று கூறி, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் அம்மாபேட்டையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதவளிக்காததற்காக பலரும் தொலைபேசியில் தன்னை மிரட்டி வருவதாக கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுனன் புகார் கூறியிருந்தார்.