தமிழ்நாடு

தூத்துக்குடியில் 144தடை உத்தரவு 27ஆம் தேதி வரை நீட்டிப்பு

தூத்துக்குடியில் 144தடை உத்தரவு 27ஆம் தேதி வரை நீட்டிப்பு

webteam

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது காவல்துறை நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில், மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும்  காவல்துறையினகும் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 27ஆம் தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி, திருச்செந்தூர் வட்டத்தை சேர்ந்த வேம்பார், குளத்தூர், ஆறுமுகமங்கலம், வேடநத்தம், ஒட்டப்பிடாரம், எப்போதும் வென்றான், தூத்துக்குடி தெற்கு, சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடந்த, மிதிவண்டி, இரு சக்கரவாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன பேரணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கத்தி,கம்பு, கற்கள், அரசியல் ,சாதி கொடிக் கம்புகள், அபாயகரமான ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.