மதுரை - 144 தடை உத்தரவு கோப்புப்படம்
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: மதுரை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதுரை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்...

PT WEB

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதுரை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிடப்பட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவித்திருந்தது.

திருப்பரங்குன்றம் மலை

இதையடுத்து ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி வந்தபோது, மலையில் அமர்ந்தபடி சிலர் அசைவ உணவு சாப்பிட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பரவின. இதைத்தொடர்ந்து, மலையின் புனிதம் கெட்டு விட்டதாகக் கூறி, நாளை போராட்டம் நடத்த இருப்பதாக இந்து முன்னணி அமைப்பு அறிவித்தது. இந்நிலையில், இந்து முன்னணி மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் நடத்த உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளதை சுட்டிக் காட்டி, ஆட்சியர் சங்கீதா செய்திக்குறிப்பு வெளிட்டுள்ளார்.

இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகளைச் சார்ந்தோர் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருவதால், அசாதாரண சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை

எனவே, மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை வெளியூர் நபர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொது அமைதியை பாதுகாக்கும் விதமாக போராட்டங்கள், கூட்டங்கள், தர்ணாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.