தமிழ்நாடு

தலைமைச் செயலக ஊழியர்களின் போராட்ட அறிவிப்பும்..! அரசின் எச்சரிக்கையும்...!

Rasus

திட்டமிட்டபடி இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என தலைமைச் செயலக அரசு பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறு தலைமைச்செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அ‌வர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பகுதியினர் ஆசிரியர்கள் ஆவார்கள். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலக அரசு பணியாளர்கள் சங்கம் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 6 சங்கங்கள் இணைந்து இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தன.

இதனையடுத்து தலைமைச்செயலக ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டால் அ‌வர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்தார். அத்துடன் போராட்டத்தில் ஈடுபடும் தலைமைச்செயலக ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பகுதிநேர மற்றும் தினக்கூலி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், வருகைப்பதிவு விவரங்களை காலை ‌10.30 மணிக்குள் அனுப்பவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர தேவையை தவிர பிற காரணங்களுக்காக ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்க இயலாது என அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என தலைமைச் செயலக அரசு பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், இன்றைய போராட்டத்தில் பங்கேற்கவில்லை என தமிழ்நாடு அரசு‌ அலுவலர் கழகம் அறிவித்துள்ளது.