பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ நோய் இல்லாத நாடாக அறிவித்துள்ள போதிலும், அண்டை நாடுகளில் போலியோ நோய் தாக்கம் இருப்பதால் போலியோ நோய் கிருமி பரவும் அபாயம் உள்ளது. எனவே,அகில இந்திய அளவில் கூடுதல் போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டு 2 தவணைகளில் போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் தவணை போலியோ சொட்டுமருந்து முகாம் ஜனவரி 28 ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது தவணை சொட்டுமருந்து முகாம் மார்ச் 11-ம் தேதி நடைபெறவுள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டுமருந்து முறையாக கொடுத்திருந்தாலும் நாளை நடைபெறும் முகாமில் அவசியம் சொட்டுமருந்து குழந்தைகளுக்கு போட்டுக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள முகாமிற்கு சென்று, குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து போட்டுக்கொள்லலாம். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டுமருந்து கொடுக்க வேண்டும்.சொட்டுமருந்து குழந்தைகளுக்கு கொடுத்தவுடன் இடது கை சுண்டுவிரலில் அடையாள மை வைக்கப்படும். எந்த ஒரு குழந்தையும் போலியோ சொட்டுமருந்து கொடுப்பதில் இருந்து விடுபடாமல் இருப்பதற்கு அடையாள மை வைக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களிலும் மற்றும் சென்னையில் மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையங்களில் நடமாடும் சொட்டுமருந்து மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
போலியோ சொட்டுமருந்து போடுவதால் எந்தவித தீங்கும் கிடையாது. அனைத்து குழந்தைகளும் போலியோ சொட்டுமருந்து ஒரேநாளில் போட்டுக் கொள்வதன் மூலம், போலியோ நோய் பரவும் வைரஸ் கிருமிகள் அவர்களது ஜீரண மண்டலத்திலிருந்து அகற்றப்பட்டு அழிக்கப்படுகின்றது. இதன் மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகளை சுற்றுச்சூழலிருந்து அறவே ஒழிக்கலாம்.
போலியோ சொட்டுமருந்து முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி, இடைவெளியின்றி மாலை 5 மணிவரை தொடர்ந்து நடைபெறும். சொட்டுமருந்து முகாம்களில் சிறப்பாக பணி செய்ய பல்வேறு அரசுத்துறை பணியாளர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அங்கன்வாடி அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதல் தவணை போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற்ற நாளான ஜனவரி 28-ம் தேதி சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட 7.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது.