தமிழ்நாடு

காயம் காரணமாக 'T23 புலி' இறந்திருக்கலாம் என சந்தேகம் - 16வது நாளாக தொடரும் தேடுதல் பணி

webteam

கூடலூரில் 4 பேரை அடித்துக்கொன்ற T23 புலி, சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட காயம் காரணமாக அது உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் புதர்கள் மற்றும் நீரோடைகளை ஒட்டிய பகுதிகளில் அவற்றை தேடும் பணி 16 வது நாளாக இன்றும் தொடர்கிறது.

கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் 4 பேரை அடித்துக்கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்தனர். இதற்காக கண்காணிப்பு கேமராக்கள், பறக்கும் கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு கூண்டுகள் அமைத்தும் எந்த முயற்சியும் வனத்துறையினருக்கு பலன் அளிக்கவில்லை. இந்நிலையில், கூடலூர் முதல் மசினகுடி வரை அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் புலி நடமாட்டம் பதிவாகவில்லை என்பதால் புலி சென்ற இடத்தையும் அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. இதனால் அதனை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே புலிக்கு ஏற்கனவே காயம் இருந்ததால் உயிரிழந்திருக்கலாம் என கருதும் வனத்துறையினர் 16ஆவது நாளாக அதனை தேடி வருகின்றனர். தற்போது புதர்கள் நிறைந்த பகுதிகள், நீர்நிலைகளை ஒட்டிய இடங்களில் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஒருவேளை புலி மீண்டும் வெளியே வந்தால் தாக்கக்கூடும் என்பதால் வனத்துறையினர் கவனமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.