உச்சநீதிமன்றம் தீர்ப்பு முகநூல்
தமிழ்நாடு

திட்டுவது தற்கொலைக்கு தூண்டுவதாகாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

ஒருவரை திட்டுவது தற்கொலைக்கு தூண்டுவதாகாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, பள்ளியின் விடுதி கண்காணிப்பாளரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழகத்தை சேர்ந்த பள்ளி ஒன்றின் விடுதி பொறுப்பாளர், மாணவர் அளித்த புகாரின்பேரில் சக மாணவரை திட்டியதாக தெரிகிறது. இந்த புகார் தொடர்பாக விசாரித்த விடுதி கண்காணிப்பாளர் சக மாணவனை அழைத்து திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அந்த மாணவன் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று மாணவனின் சக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக விடுதிக் காப்பாளர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதனையடுத்து, தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதி கண்காணிப்பாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ,வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து விடுதி கண்காணிப்பாளர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் அமானுல்லா, பிரசாந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், தான் திட்டியதால் மாணவா் தற்கொலை செய்துகொள்வாா் என்று ஒருபோதும் எண்ணவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டவா் தரப்பிலான வாதம் ஏற்புடையது. சக மாணவா் அளித்த புகாரை அடிப்படையாகக் கொண்டு அதற்குரிய தீா்வுகளை வழங்குவதற்கு மாணவரை குற்றஞ்சாட்டப்பட்டவா் திட்டியதை பிரதானமாக கருதுவது முறையல்ல; மேலும் உயிரிழந்த மாணவரின் பள்ளிப் பாதுகாவலா் என்ற முறையில் அவரை நல்வழிப்படுத்தி மீண்டும் அதே தவறை செய்யாமல் இருக்கவே திட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டவா் கூறியுள்ளாா். உயிரிழந்த மாணவருக்கும் தனக்கும் தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்னையும் இல்லை எனவும் அவா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒருவரைத் திட்டுவது தற்கொலைக்குத் தூண்டும் செயலாகாது எனக் கருதி குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளியின் பொறுப்பாளா் விடுவிக்கப்படுகிறாா் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 306-இன்கீழ் கைது செய்யப்பட்ட பள்ளியின் பொறுப்பாளரை விடுவிக்க மறுத்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.