தமிழ்நாடு முழுவதுமே பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில் சென்னையில் மாணவர்களை பள்ளிக்கு வர வேண்டும் என்று தனியார் பள்ளி ஒன்று உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் தற்போதுவரை மழையானது பெய்து வருகிறது. இதனால், சென்னை, திருவாரூர் உட்பட மொத்தம் 20 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்படிப்பட்ட சூழலிலும் வளசரவாக்கத்தில் இயங்கக்கூடிய பொன் வித்யாஷ்ரம் என்ற தனியார் பள்ளி ஒன்று, மழையிலும் பள்ளி மாணவர்களை பள்ளிக்கு வரும்படி தெரிவித்துள்ளது. இது குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு குறுச்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதில், 9 மணிக்கு பள்ளிக்கு வந்துவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
கிட்டதட்ட 3500 - 4000 வரை மாணவர்கள் இங்கே படிப்பதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில்தான், பள்ளியின் உள்ளே மாணவர்கள் தேர்வு எழுதி கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில், மாணவர்களின் பெற்றோர், விடுமுறையில் பள்ளியை செயல்படுத்துவது ஏன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு விளக்கமளித்த பள்ளி நிர்வாகம் இன்று தேர்வு இருந்ததால் விடுமுறை அறிவிக்க முடியவில்லை என்றும், விடுமுறை குறித்து எந்ததகவலும் வரவில்லை என்றும் விளக்கமளித்துள்ளனர். இந்நிலையில், நிர்வாகத்தின் அறிவுறுத்தலால் மழையிலும் பள்ளிக்கு மாணவர்கள் வந்து தேர்வு எழுதி கொண்டிருக்கின்றனர்.