தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் நாளை திறக்கப்படுகின்றன.
முதலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தாமதமாக ஜூன் 15 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் வெளியானது. பின்னர், திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். ஏற்கனவே பள்ளிகள் திறப்பு குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் 8 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வரும் 12 ஆம் தேதி திறக்கப்படும் என, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த கோரிக்கையை ஏற்று இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கமலக்கண்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கோடைகால விடுமுறை முடிந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜுன் 1 ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு 7 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி அனைத்து பள்ளிகளும் நாளை திறக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். மற்ற மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி நாளைய தினமே பள்ளிகள் திறக்கப்படுகிறது.