வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடியவிடிய மழை பெய்து, 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் உருவான வளிமண்டல சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இதனால் அக்டோபர் 21ஆம் தேதியான இன்று முதல் 23ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு மழை தீவிரமடையும் என சொல்லப்படுகிறது.
இதன்காரணமாகவே இன்று இரவு சென்னை மற்றும் அதனைசுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் விடியவிடிய மழை கொட்டித்தீர்த்துள்ளது. அதன் தாக்கமாக இன்று வடகடலோரம், தென் கடலோரத்தில் கன முதல் மிககனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும், அதேநேரத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கனமழை வாய்ப்பும், முற்பகலில் உள் மாவட்டங்களிலும் மழை துவங்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.
இந்தசூழலில் தான் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்ததோடு மழை தொடரும் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.