தமிழ்நாடு

“மாணவர்களின் காய்ச்சல் அறிக்கைகளை தயார் செய்யுங்கள்”.. சென்னை பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்..!

“மாணவர்களின் காய்ச்சல் அறிக்கைகளை தயார் செய்யுங்கள்”.. சென்னை பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்..!

Rasus

டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல்கள் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையில் உள்ள பள்ளி மாணவர்களின் தினசரி காய்ச்சல் தொடர்பான அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை கேட்டுள்ளது.

பொதுவாக மழைக் காலங்கள் வந்தாலே கூடவே நோயும் தொற்றிக் கொள்ளும். தற்போது டெங்கு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருகின்றன. டெங்கு காய்ச்சலுக்கு ஆங்காங்கே ஏற்படும் உயிரிழப்புகளும் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளன. அதேசமயம் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்க சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பள்ளி மாணவர்களின் தினசரி காய்ச்சல் தொடர்பான அறிக்கையை அந்தந்த பள்ளிகள் சமர்பிக்க பள்ளிக் கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. பள்ளி மாணவ- மாணவிகள் உடல்நிலை சரியில்லாத காரணத்தை காட்டி மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக விடுமுறை எடுக்கும்பட்சத்தில் அதுகுறித்து உடனடியாக தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை சென்னையில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசாங்க பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை மாதவரத்தை சேர்ந்த தம்பதியினர் கஜலட்சுமி- சந்தோஷ்குமார். இவர்களின் இரட்டை குழந்தைகள் தீக்சா, தக்சன். ஏழு வயதான இந்த இரட்டை இழந்தைகள் வீட்டின் அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தனர். சமீபத்தில் பரவிய டெங்கு காய்ச்சலுக்கு இந்த இரட்டை குழந்தைகளும் பலியாகினர். இந்நிலையில் சென்னையில் உள்ள பள்ளி மாணவர்களின் தினசரி காய்ச்சல் தொடர்பான அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை கேட்டுள்ளது.

Courtesy: TheHindu