ஓமலூரை அடுத்த தாரமங்கலம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் மூன்றாம் வகுப்பு மாணவன் உயிரிழந்ததையடுத்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள துட்டம்பட்டி கிராமத்தில் உள்ள கோனேரிவளவு பகுதியை சேர்ந்தவர் செந்தில். கூலித் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் துட்டம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை இரண்டு மகன்களையும் பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் செந்தில்.
அப்போது மோட்டார் சைக்கிளின் பின்புறம் வந்த சரக்கு லாரி, செந்திலின் மோட்டார் சைக்கிளின் மீது மோதியதாக சொல்லப்படுகிறது. இதில் 3-ம் வகுப்பு படித்து வரும் செந்திலின் எட்டு வயது மகன் கதிர்வேல் சாலையில் தூக்கி வீசப்பட்டார். அப்போது லாரி சிறுவன் மீது ஏறியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் லாரியை உடைத்து சேதப்படுத்தினர். மேலும் லாரியில் இருந்த பிரிட்டானியா நிறுவனத்தின் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பால் உணவு பொருட்களை உடைத்து ஏரியில் கொட்டியதோடு மட்டுமல்லாமல் லாரியின் டயர்களை தீ வைத்தும் கொளுத்தினர்.
இந்நிலையில், தகவல் அறிந்து அங்கே வந்த ஓமலூர் டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த பள்ளி சிறுவனின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது “ இந்த பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க இந்த பகுதியில் பள்ளிகளை ஒட்டியுள்ள இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அங்கே பதட்டமான சூழல் இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.