ஈரோடு அருகே தனியார் பள்ளி வாகனம் ஒன்று தேநீர் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் வாகன ஓட்டுநர் உயிரிழந்தார்.
திண்டலில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்வதற்காக செந்தில் என்பவர் பள்ளி வாகனத்தை ஓட்டிச்சென்றார். கருங்கல்பாளையம் பகுதியில் வேன் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாலையோரத்திலிருந்த தேநீர் கடைக்குள் பள்ளி வேன் புகுந்தது. அதில், உருக்குலைந்த வாகனத்தில் சிக்கி ஓட்டுநர் செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தின் போது தேநீர் கடையில் யாரும் இல்லை, குழந்தைகளும் யாரும் வாகனத்தில் இல்லை. இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது, ஓட்டுநருக்கு ஏதேனும் திடீர் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து கருங்கல்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.