தமிழ்நாடு

பள்ளி மாணவியின் குடும்பம் வறுமையை போக்க ஆசிரியர்கள் எடுத்த மனிதநேய செயல்

பள்ளி மாணவியின் குடும்பம் வறுமையை போக்க ஆசிரியர்கள் எடுத்த மனிதநேய செயல்

kaleelrahman

கீரனூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவியின் குடும்ப வறுமையைப் போக்கும் வகையில் அந்த மாணவியின் தாயாருக்கு பள்ளி ஆசிரியர்கள் 5 ஆட்டுக்குட்டிகளை வாங்கிக் கொடுத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள லெக்கனாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில், அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆண்டனி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் நலனுக்காக ஏற்கனவே பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தி வருவதோடு அவர்களின் கல்வி வளர்ச்சியிலும் பல்வேறு புதுமைகளை புகுத்தி மாவட்டத்திலுள்ள முன்மாதிரி பள்ளிகளில் ஒன்றாக அதனை செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி சசிகலா என்பவரின் தந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட அவரது தாய் மாரியாயி வறுமை சூழ்ந்த நிலையில் தனது மகள் சசிகலா மற்றும் அவரது தம்பியையும் மிகுந்த சிரமத்திற்கு இடையே வளர்த்து கல்வி கற்க பள்ளிக்கு அனுப்பி வருகிறார்.

விவசாய கூலி வேலைக்கு சென்று தனது குழந்தைகளை வறுமை நிலையில் படிக்க வைத்து வரும் மாரியாயின் நிலையை அறிந்த அப்பள்ளியின் ஆசிரியர்கள் தங்கள் சொந்த முயற்சியாலும் அப்பள்ளியில் செயல்படும் செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாகவும் நிதி வசூல் செய்து ஐந்து ஆட்டுக் குட்டிகளை வாங்கி அதனை மாணவர்கள் முன்னிலையில் சசிகலாவின் தாயாரிடம் வழங்கினர்.

இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி கலந்து கொண்டு அந்த ஏழை தாய்க்கு ஆட்டுக்குட்டிகளை வழங்கி அதனை வளர்த்து குடும்ப வறுமையைப் போக்கி தனது குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் லெக்கணாப்பட்டி அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர்களின் இந்த மனிதநேயமிக்க செயல் காண்போரை நெகிழ வைத்தது.