சிறுவன் ஒருவன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
செங்கல்பட்டை அடுத்த வெண்பாக்கம் பகுதியை சேர்ந்த முருகன் உஷா தம்பதியின் மகன் புருஷோத்தமன். சிறுவனுக்கு வயது 14 ஆகிறது. இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி முதல் புருஷோத்தமனை காணவில்லை என காவல்துறையில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. அதனையடுத்து காவல்துறையினர் சிறுவனைத் தேடிவந்தனர். இதனிடையே இன்று அரசு தொழிற்பயிற்சி மையம் அருகே வெண்பாக்கம் சாரதாம்பாள் நகரில் ஒரு தனியார் விவசாய கிணற்றில் உடல் ஒன்று மிதப்பதாக காவல்துறைக்கு அந்தத் தொழிற்பயிற்சி மாணவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு துறை, காவல்துறையினர் கிணற்றில் மிதந்த உடலை கைப்பற்றினர்.
இதனையடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் கிணற்றில் மிதந்து கொண்டிருந்த உடல் காணாமல்போன புருஷோத்தமன் என அடையாளம் காணப்பட்டது. கை கால்கள் கட்டப்பட்டு கொலை செய்து யாரேனும் கிணற்றில் வீசி உள்ளனரா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.