அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் பள்ளி முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்த 5ஆம் வகுப்பு மாணவன் எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை சேர்ந்த அரவிந்தன் - வாசுகிதேவி தம்பதியர் மகன் சூர்யா ஜெயந்த் (10). இவர் அருகில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஜந்தாம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் சூர்யா ஜெயந்த் வீட்டிலிருந்து பள்ளிக்கு தினமும் ஆட்டோவில் சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், இன்று மாலை பள்ளி முடிந்து வழக்கம் போல் மாணவன் சூர்யா ஜெயந்த் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது தனியார் சிமெண்ட் ஆலை அருகே நாய் ஒன்று ஆட்டோவின் குறுக்கே விழுந்ததில் எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த மாணவன் சூர்யா ஜெயந்த் பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பந்தல்குடி காவல்துறையினர் மாணவனை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த பந்தல்குடி காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோ கவிழ்ந்து 5ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.