தமிழ்நாடு

சாதனை மாணவர்களை தேசியக் கொடி ஏற்றவைத்து ஊக்கப்படுத்தும் பள்ளி நிர்வாகம்

webteam

திருச்செந்தூர் பந்தல் மண்டபம் அருகே உள்ள சரவணய்யர் நடுநிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி தேசியக் கொடியை ஏற்றினார்.

கடந்த 1895-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திருச்செந்தூரில் தொடங்கப்பட்ட சரவணய்யர் நடுநிலைப் பள்ளி விரைவில் 127-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இப்பள்ளியில் மொத்தம் 160 மாணவர்கள் படிக்கிறார்கள். பொதுவாக பள்ளிகளில் சுதந்திர தின விழா என்றால் தலைமை ஆசிரியர், தாளாளர், தியாகிகள் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். ஆனால் இப்பள்ளியில் புதுமையாக 8-ஆம் வகுப்பு முடித்த, தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து தேசியக் கொடி ஏற்ற வைத்து மரியாதை செய்கிறது பள்ளி நிர்வாகம்.

இது குறித்து தாளாளர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது... 'இன்றைக்கு 75-வது சுதந்திர தினம். கடந்த ஆண்டு எங்கள் பள்ளியில் தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி சண்முக பிரியா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு தேசியக் கொடியை ஏற்றினார். மாணவிக்கு அப்துல் கலாம் எழுதிய 'எனது பயணம்' புத்தகம் பரிசளிக்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் அரசு திறனாய்வு தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், தேர்ச்சி பெறுவது கஷ்டம். தேர்ச்சி பெறுகிறவர்களுக்கு அரசு மாதம் ரூ.1000 வீதம் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ரூ.48000 வரை உதவித்தொகை வழங்குகிறது. எங்கள் பள்ளியில் இந்த தேர்வுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றோம்.

இதன் மூலம் கடந்த 5-வருடத்தில் 36 பேர் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள். இதன் மூலம் தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற இளம் வயதில் சாதனை படைத்த மாணவர்களை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அழைத்து ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கான தலைமை பண்பு வளர்வதுடன் சாதிக்கும் எண்ணமும் உருவாகிறது' என்றார்.

மாணவி கூறுகையில்... தேசியக் கொடி ஏற்றியது மிகவும் பெருமையாக இருக்கிறது. முதல்வர், ஆளுநர், மாவட்ட ஆட்சியர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள்தான் தேசியக் கொடியை ஏற்றுவார்கள். எனக்கு இந்த வாய்ப்பு தந்ததற்கு பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி. என்னைபோல இன்னும் பல மாணவர்கள் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று தெரிவித்தார். இச்சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.